/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருவிடந்தை ஆன்மிக, கலாசார பூங்கா அமைக்க மண் பரிசோதனை துவக்கம்
/
திருவிடந்தை ஆன்மிக, கலாசார பூங்கா அமைக்க மண் பரிசோதனை துவக்கம்
திருவிடந்தை ஆன்மிக, கலாசார பூங்கா அமைக்க மண் பரிசோதனை துவக்கம்
திருவிடந்தை ஆன்மிக, கலாசார பூங்கா அமைக்க மண் பரிசோதனை துவக்கம்
ADDED : டிச 31, 2024 01:08 AM

மாமல்லபுரம், தமிழக சுற்றுலாத்துறை, கோவளம் அடுத்த திருவிடந்தையில் அமைக்கவுள்ள ஆன்மிக, கலாசார, சுற்றுச்சூழல் பூங்காவிற்காக மண் பரிசோதனை துவக்கப்பட்டு உள்ளது.
தமிழக சுற்றுலாத்துறை, மாநிலத்தில் சுற்றுலா பயணியரை அதிகரிக்கவும், சுற்றுலா மேம்பாட்டிற்காகவும், பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த வகையில், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில், 'பிபிடி' எனப்படும் பொது, தனியார் முதலீட்டு பங்களிப்பில், கலாசார, ஆன்மிக, சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க உள்ளது. இந்த பூங்கா வளாகத்தில் தமிழக பிரதான கோவில்களின் மாதிரி கோவில்கள், சிற்ப பூங்கா, கலை, நடன அரங்கம், தமிழக நாட்டுப்புற கலைகள் வளாகம், ஊரக கிராம வாழ்வியல் வளாகம், கைவினை மற்றும் உணவு வீதி, இசை தோட்டம், தலையாட்டி பொம்மை வளாகம், அலங்கார நடைபாதை அமைகின்றன.
மேலும், விஹாரம் வளாகம், ஒளிரும் பூங்கா, குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, நட்சத்திர வனம், நவக்கிரஹ வனம், தியான தோட்டம், துளசி வனம், ஸ்தல விருட்சங்கள் வனம், ராசி வனம், புனித மலர்கள் வனம், உடல்நல முத்திரைகளை கைகளில் செயல்படுத்தும் தோட்டம், விருந்தோம்பல் வளாகம், விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தும் வளாகம், கோ கார்ட் எனப்படும் வாகன சவாரி வளாகம் உள்ளிட்டவையும் அமைகின்றன.
இதுகுறித்து, 2022ல் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
திட்டத்திற்கான விரிவான அறிக்கை, மதிப்பீடு குறித்து, தனியார் ஆலோசனை நிறுவனம் வாயிலாக பெறப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக, அதே பகுதியில் உள்ள 218 ஏக்கர் இடத்தில், இப்பூங்கா வளாகம் அமைகிறது.
இத்திட்டத்திற்கு நிதியுதவி அளிக்குமாறு, மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியது. மத்திய அரசும், 99.96 கோடி ரூபாய் அளித்துள்ளது.
இப்பகுதியில் கட்டுமானங்கள் துவக்க, மண் பரிசோதனை அவசியம். இதையடுத்து, தனியார் ஒப்பந்த நிறுவனம், முழு நீள பரப்பில் சில இடங்களில், தற்போது மண் பரிசோதனை ஆய்வை துவக்கியுள்ளது.