/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுகாதார நிலையங்களில் சூரிய ஒளி மின் சக்தி... சிக்கனம்!
/
சுகாதார நிலையங்களில் சூரிய ஒளி மின் சக்தி... சிக்கனம்!
சுகாதார நிலையங்களில் சூரிய ஒளி மின் சக்தி... சிக்கனம்!
சுகாதார நிலையங்களில் சூரிய ஒளி மின் சக்தி... சிக்கனம்!
ADDED : செப் 28, 2024 04:09 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு ஆரம்ப சுகாதார நிலையங்களில், சோலார் மின் தகடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன் வாயிலாக மின் கட்டணத்தை குறைக்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 49 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில், நந்திவரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரம், ஒத்திவாக்கம், மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், குண்ணவாக்கம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில், தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியில் கடந்த ஆண்டு சோலார் மின் தகடுகள் அமைக்கப்பட்டன.
அதன்பின், நந்திவரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், சோலார் மின் சக்தி பயன்பாடு வாயிலாக, 10 கிலோ வாட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.
இங்கு, அறுவை சிகிச்சை, தடுப்பூசி வைக்கும் குளிர்சாதன பெட்டிகளுக்கு, தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது. இதேபோல், சிங்கபெருமாள் கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில், மிக்ஜாம் புயல் காற்று வீசி பலத்த மழை பெய்தபோது, சோலார் மின் சக்தி பயன்பாடு நோயாளிகளுக்கு பயன் உள்ளதாக இருந்தது.
இதைத் தொடர்ந்து, ரெட்டிப்பாளையம், செம்பாக்கம், மானாமதி, வல்லிபுரம், பொலம்பாக்கம், எல்.எண்டத்துார், வடக்கு வாயலுார் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில், தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் சோலார் தகடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணி முடிந்தவுடன், சோலார் மின் சக்தி பயன்பாடு துவக்கப்படும் என, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சோலார் பயன்படுத்தப்படுவது போல், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து, மாவட்ட சுகாதார துணை இயக்குனர் பரணிதரன் கூறியதாவது:
தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் கடந்த ஆண்டு, ஐந்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் சோலார் தகடுகள் அமைக்கப்பட்டன.
நந்திவரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்ட சோலார் தகடுகள் வாயிலாக, ஒரு நாளில், 10 கிலோ வாட் மின்சாரம் கிடைக்கிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஒரு நாளில் 5 கிலோ வாட் மின்சாரம் கிடைக்கிறது. இதனால், 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை அங்கு மின் கட்டணம் குறைகிறது.
இந்த ஆண்டு, ஏழு ஆரம்ப சுகாதார நிலையங்களில், சோலார் தகடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சோலார் தகடுகள் அமைக்க தனியார் நிறுவனங்களிடம் கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கூறினார்.