/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உறுப்பு தானம் செய்த வாலிபர் உடலுக்கு அரசு மரியாதை
/
உறுப்பு தானம் செய்த வாலிபர் உடலுக்கு அரசு மரியாதை
ADDED : ஆக 10, 2025 10:46 PM
திருப்போரூர்:திருப்போரூர் அருகே, உறுப்பு தானம் செய்த வாலிபர் உடலுக்கு, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்போரூர் அடுத்த தையூர் ஊராட்சியில் அடங்கிய கோமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி மதுரை என்கிற சூர்யா, 35. அதே பகுதியைச் சேர்ந்தவர், இவரது நண்பர் காந்தா, 35.
இருவரும் கடந்த 6ம் தேதி, 'பல்சர்' பைக்கில் கேளம்பாக்கத்திலிருந்து திருப்போரூர் நோக்கி, ஓ.எம்.ஆர்., சாலையில் சென்றனர்.
பைக்கை, பாண்டி மதுரை ஓட்டினார்.
அவர்கள் வசிக்கும் கோமாநகர் பகுதிக்கு செல்ல, வலதுபுறம் திருப்பினர்.
அப்போது, அதே திசையில் வேகமாக வந்த 'இனோவா கிரிஸ்டா' கார், இவர்களது பைக் மீது மோதியது.
இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில், பாண்டி மதுரைக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடன் வந்த நண்பர் காந்தாவுக்கு, லேசான காயம் ஏற்பட்டது.
உடனே, பாண்டி மதுரையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தது தெரிந்தது.
இதையடுத்து, அவரது பெற்றோர் சம்மதப்படி இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் தானமாக பெறப்பட்டன.
இதையடுத்து, நேற்று காலை 10:00 மணிக்கு, அரசு சார்பில் கொடையாளியின் உடலுக்கு, திருப்போரூர் தாசில்தார் சரவணன், தையூர் ஊராட்சி தலைவர் குமரவேல், தையூர் கிராம நிர்வாக அலுவலர் மோகன சுந்தர் மற்றும் அரசு ஊழியர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.