/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவிலில் வாகனம் நிறுத்த... தடை!
/
சிங்கபெருமாள் கோவிலில் வாகனம் நிறுத்த... தடை!
UPDATED : ஜூலை 15, 2024 07:03 AM
ADDED : ஜூலை 15, 2024 06:19 AM

மறைமலைநகர் : சிங்கபெருமாள் கோவிலில் உள்ள ஜி.எஸ்.டி., சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை வி திக்கப்பட்டு, எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், சிங்கபெருமாள் கோவிலில் போக்குவரத்து நெரிசல் குறையும் என, வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில், சிங்கபெருமாள் கோவில் வளர்ந்து வரும் ஊராட்சி. இங்கு, தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்கி மறைமலை நகர், ஒரகடம், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தோர், தங்களின் அடிப்படை தேவைகளுக்கு இங்கு வந்து செல்கின்றனர்.
ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள மெல்ரோசாபுரம் - பகத்சிங் நகர் வரை மற்றும் சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், தனியார் தொழிற்சாலை பேருந்துகள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், அடிக்கடி விபத்து சம்பவங்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, இந்த சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், பரனூர் -- பொத்தேரி வரை உள்ள சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகள் அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும், அனுமந்தபுரம் சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.
- அதிகளவிலான வாகன போக்குவரத்து நிறைந்த சிங்கபெருமாள் கோவில், ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக, தனியார் நிறுவனங்களுக்கு ஆட்கள் ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்களால் பலர் விபத்தில் சிக்கி வருகின்றனர். தற்போது, வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதால், பெருமளவு போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் குறைய வாய்ப்பு உள்ளது.
- எஸ்.பூபதி,
வாகன ஓட்டி, சிங்கபெருமாள் கோவில்.
சிங்கபெருமாள் கோவில் பகுதியை பொறுத்தவரை, பல்வேறு இடங்களில் கடைகளுக்கு முன் சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். இந்த வாகனங்களால் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'பார்க்கிங்' கட்டணத்தை சேமிக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோல் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, இனிமேல் உரிய அபராதம் விதிக்கப்படும்.
- போக்குவரத்து போலீசார்,
மறைமலை நகர்.