/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரியில் தெரு நாய்களால் பீதி தினமும் 20 நபருக்கு கட்டாய 'கடி'
/
கூடுவாஞ்சேரியில் தெரு நாய்களால் பீதி தினமும் 20 நபருக்கு கட்டாய 'கடி'
கூடுவாஞ்சேரியில் தெரு நாய்களால் பீதி தினமும் 20 நபருக்கு கட்டாய 'கடி'
கூடுவாஞ்சேரியில் தெரு நாய்களால் பீதி தினமும் 20 நபருக்கு கட்டாய 'கடி'
ADDED : பிப் 14, 2025 10:48 PM
கூடுவாஞ்சேரி:செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தின் மையப் பகுதியாக, கூடுவாஞ்சேரி நகராட்சி உள்ளது. இதன் சுற்றுப் பகுதியில், 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன.
கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் சுற்றுப்புற ஊராட்சிகளில், தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதால் சிறுவர்கள், பெண்கள், முதியோர் என, நாளொன்றுக்கு 20 நபர்கள் வீதம், நாய்க்கடிக்கு ஆளாகின்றனர்.
எனவே, தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்புற ஊராட்சிகளில், கடந்த நான்கு ஆண்டுகளில் தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், நாய்களின் எண்ணிக்கை இரு மடங்காகி, தற்போது 10,000க்கும் மேற்பட்ட நாய்கள் இப்பகுதியை வலம் வருகின்றன.
உணவு கிடைக்காமல் ஆடு, மாடு, கோழி என, வளர்ப்பு பிராணிகளை கடித்துக் குதறும் இந்நாய்கள், தெருவில் நடந்து செல்பவர்களையும் கடித்து, உயிர் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
தவிர, இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்திச் சென்று கடிப்பதும், வாடிக்கையாக உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து, தெருநாய் தொல்லையிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, கூடுவாஞ்சேரி மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறியதாவது:
நாளொன்றுக்கு சராசரியாக, 20 நபர்கள் நாய்க்கடிக்கு ஆளாகி, இங்கு வந்து ஊசி செலுத்திக்கொண்டு செல்கின்றனர். சில நாட்களில் இந்த எண்ணிக்கை, 30க்கும் மேல் உள்ளது. இரவு நேரத்திலும் நாய் கடித்துவிட்டது என, பலர் மருத்துவமனைக்கு வருகின்றனர். சுற்றுப் பகுதியில் வேறு எங்கும் அரசு மருத்துவமனை இல்லை. எனவே, இங்கு தான் பெரும்பாலானோர் வந்து சிகிச்சை எடுக்கின்றனர்.
தவிர, தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வோர் எண்ணிக்கையையும் கணக்கிட்டால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.
எனவே, நிரந்தர தீர்வு ஏற்பட, நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்காதபடி, அவற்றுக்கு இனப்பெருக்க தடை சிகிச்சை செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
இரவு நேரங்களில் ரோந்து செல்லும் போது, தெரு நாய்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், சில தெருக்களில் ரோந்து செல்வதற்கே அச்சமாக உள்ளது. கடந்த மாதம், வண்டலுார் அடுத்த ஊரப்பாக்கத்தில் வசிக்கும் எஸ்.ஐ., ஒருவர் நாய்க்கடிக்கு ஆளானார். நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.