/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாணவியர் கடத்தல்? 'ஆடியோ' ஏற்படுத்திய பீதி
/
மாணவியர் கடத்தல்? 'ஆடியோ' ஏற்படுத்திய பீதி
ADDED : பிப் 17, 2024 01:46 AM
மடிப்பாக்கம்:பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட மடிப்பாக்கம், உள்ளகரம் மற்றும் புழுதிவாக்கம் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன.
இங்குள்ள இரு தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவியரை குறிவைத்து பின்தொடரும் மர்ம நபர் ஒருவர், அந்த மாணவியரை கடத்தி செல்வதாக, பெற்றோர் மற்றும் ஆசிரியரையும் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அடுத்தடுத்து மூன்று ஆடியோக்கள் பரவியதில், பெற்றோரிடம் பீதி ஏற்பட்டுள்ளது.
மூன்று ஆடியோக்களிலும் ஒரு பெண்ணின் எச்சரிக்கை குரல் ஒலிக்கிறது. அதில், ஆண் வேடமிட்ட பெண், மாணவியரை குறி வைத்து கடத்துவதாகவும், ஒரு மாணவி தப்பியதாகவும் பெண் குரல் கூறுகிறது. சிறுமியரை நோட்டமிட்டு, பள்ளி மற்றும் டியூஷன் கற்றுத்தரும் பகுதிகளில் சுற்றுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது, பள்ளி குழந்தைகளின் பெற்றோரின் 'வாட்ஸாப் குழு'வில் பரவியதால், பெற்றோர் பீதியடைந்துள்ளனர்.
இது குறித்து மடிப்பாக்கம் போலீசாரிடம் கேட்டபோது, 'இந்த ஆடியோ பதிவில் கூறப்பட்டுள்ள நபர் பற்றியோ, இதர நிகழ்வு பற்றியோ எந்த புகாரும் வரவில்லை' என்றனர்.
இந்நிலையில், ஆடியோக்களின் உண்மைத்தன்மை பற்றி ஆராய்ந்து, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.