/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தண்டவாளம் மூழ்கியதால் புறநகர் ரயில்கள் தாமதம்
/
தண்டவாளம் மூழ்கியதால் புறநகர் ரயில்கள் தாமதம்
ADDED : அக் 16, 2024 12:35 AM

சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை, நேற்று இரவு வரையும் நீட்டித்தது. மிதமானது முதல் கன மழை வரை தொடர்ந்ததால், சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, எழும்பூர் - பூங்கா, பல்லாவரம் - தாம்பரம், பரங்கிமலை, திருவொற்றியூர், கொருப்பேட்டை, அம்பத்துார், ஆவடி, வில்லிவாக்கம் உள்ளிட்ட, 10 இடங்களில் தண்டவாளம் மூழ்கியது. இதனால், விரைவு மற்றும் மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. பயணியர் வருகை குறைவாக இருந்ததால், வழக்கத்தை விட குறைவான சேவைகளே இயக்கப்பட்டன.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
கனமழையால் பயணியர் வருகை குறைவாக இருந்தது. இருப்பினும், தேவைக்கு ஏற்ப மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. அதுபோல், வெளியூர் விரைவு ரயில்களின் சேவை ரத்து இல்லாமல் இயக்கப்படுகிறது.
எழும்பூர் உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் மழைநீர் தேங்கியதால், மோட்டார் பம்ப் வாயிலாக வெளியேற்றப்பட்டது.
இதனால், மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. பல்லாவரம் அருகே சிக்னலில் கோளாறு ஏற்பட்டது. இதனால், ரயில்களின் சேவையில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது. ரயில் இயக்கம் குறித்து பயணியர் அறிந்து கொள்ள 044 - 2533 0952, 044 - 2533 0953 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.