/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியார் லாரி குடிநீர் வினியோகம் கணக்கெடுப்பு! வாரியத்திற்கு மாற்ற அதிரடி திட்டம்
/
தனியார் லாரி குடிநீர் வினியோகம் கணக்கெடுப்பு! வாரியத்திற்கு மாற்ற அதிரடி திட்டம்
தனியார் லாரி குடிநீர் வினியோகம் கணக்கெடுப்பு! வாரியத்திற்கு மாற்ற அதிரடி திட்டம்
தனியார் லாரி குடிநீர் வினியோகம் கணக்கெடுப்பு! வாரியத்திற்கு மாற்ற அதிரடி திட்டம்
ADDED : ஆக 19, 2024 12:06 AM
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்கவும், தனியார் லாரி குடிநீர் வினியோகம் செய்யும் இடங்களுக்கு, 100 சதவீதம் குழாய் இணைப்பு வழியாக குடிநீர் வழங்கவும், வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, சென்னையில் வார்டு வாரியாக, தனியார் லாரிகள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் விபரம் குறித்து கணக்கெடுக்கப்பட உள்ளது.
சென்னை குடிநீர் வாரியத்தில், 13.35 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. மொத்தமுள்ள 200 வார்டுகளுக்கு, தினமும் 106 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக, 5,700 கி.மீ., துாரத்திற்கு குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. விரிவாக்கத்திற்கு முந்தைய மாநகராட்சியில், 1.7 கோடி லிட்டரும், விரிவாக்க பகுதிகளில், 1.1 கோடி லிட்டரும், லாரிகள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஒப்பந்தம்
இப்பணிக்காக, 425 ஒப்பந்த லாரிகளை, குடிநீர் வாரியம் நியமித்துள்ளது.
இது போக, விரிவாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளில், தனியார் இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் வாயிலாக குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது. இதில், 1,000க்கும் மேற்பட்ட தனியார் லாரிகள் ஈடுபட்டுள்ளன.
குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு லாரி வாயிலாகவே குடிநீர் வினியோகம் நடக்கிறது. இதில் பெரும்பாலும், தனியார் லாரிகளே ஒப்பந்தம் எடுத்துள்ளன.
தனியார் லாரி உரிமையாளர்கள், சென்னையின் பல பகுதிகளுக்கு தடையற்ற தண்ணீர் வழங்க, புறநகர் பகுதிகளில், கட்டுப்பாடு இல்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து, விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
தவிர, அசுர வேகத்துடன் செல்லும் தண்ணீர் லாரிகளால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்கவும், லாரி குடிநீரை குறைக்கும் வகையிலும், குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. அதற்காக, நகரில் ஓடும் தனியார் லாரிகளின் விபரம் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
காலநிலை மாற்றத்தால், எதிர்பாராத நேரத்தில் மழை பெய்கிறது. அதிக அளவு மழை பெய்தாலும், அதை பூமிக்குள் இறக்கும் வகையிலான கட்டமைப்பு, சென்னையில் போதிய அளவு இல்லை.
இதனால், ஆழ்துளைக் கிணறு பயன்பாட்டை குறைத்து ஏரி, கடல்நீர் சுத்திகரிப்பு குடிநீரை முழுமையாக பயன்படுத்த வேண்டும். லாரி குடிநீர் பயன்பாட்டை குறைத்து, அனைவரும் குழாய் வழி குடிநீர் இணைப்பு பெற வேண்டும்.
கணக்கெடுப்பு
இதற்காக, வார்டு வாரியாக, லாரிகள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் விபரம் குறித்து, கணக்கெடுப்பு நடக்க உள்ளது.
தனியார் லாரிகள் எத்தனை ஓடுகின்றன; அவை எந்தெந்த இடங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்கின்றன போன்ற விபரங்களை சேகரிக்க உள்ளோம்.
இதன் வாயிலாக, தனியார் லாரி குடிநீர் சென்ற பகுதிகளுக்கு, வாரியத்தின் குழாய் வழியாக குடிநீர் வினியோகிக்க உள்ளோம்.
மால், பெரிய ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, வாரியத்தை விட தனியார் லாரிகளே அதிகம் குடிநீர் வழங்கி வருகின்றன. இந்த கணக்கெடுப்புக்கு பின், அவற்றுக்கும் முழு அளவில் குழாய் வழியே குடிநீர் வழங்குவோம்.
வணிகம் சார்ந்த கட்டடங்களில், குழாய் இணைப்பு குடிநீர் அளவை கணக்கிட, 'டிஜிட்டல் மீட்டர்' பொருத்தப்படும். இதில், குடிநீர் பயன்பாட்டில் மோசடி செய்ய முடியாது என்பதால், வாரியத்திற்கு வருவாய் கிடைக்கும்.
மாநகராட்சி விரிவாக்க மண்டலங்களில், 3,500 கோடி ரூபாய்க்கு மேல், குடிநீர், கழிவுநீருக்கான திட்டங்கள் நடந்து வருகின்றன. இப்பணிகள் முடிந்தால், அப்பகுதிகளில் முழு அளவில் குடிநீர் வழங்க திட்டமிட்டு வருகிறோம்.
முன்பு, சென்னை வாரியத்திற்கு போதிய அளவு குடிநீர் இருக்காது. தற்போது நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து தேவையான அளவு தண்ணீர் கிடைக்கிறது. தவிர, குடிநீருக்கான மாற்றுவழியை பின்பற்றி வருகிறோம்.
அரசியல் தலையீடு, நிர்வாக குளறுபடி காரணங்களால், தனியார் லாரி குடிநீர் வினியோகம், இரு ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது.
அதை கட்டுப்படுத்தவும், வாரிய குடிநீர் இணைப்பை அதிகப்படுத்தவும், இந்த கணக்கெடுப்பு கைகொடுக்கும்.
மேலும், முழுதுமாக குழாய்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்தால், குடிநீர் லாரிகள் பயன்பாடின்றி, போக்குவரத்து நெரிசலும், லாரிகளால் ஏற்படும் விபத்துகளும் சென்னையில் குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-- நமது நிருபர் --