/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாடுகளை பிடிக்க தனியாருடன் தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்தம்
/
மாடுகளை பிடிக்க தனியாருடன் தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்தம்
மாடுகளை பிடிக்க தனியாருடன் தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்தம்
மாடுகளை பிடிக்க தனியாருடன் தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்தம்
ADDED : மார் 08, 2024 01:23 AM
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி, ஐந்து மண்டலங்கள், 70 வார்டுகளை கொண்டது. இந்த மாநகராட்சி சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் திரிவது அதிகரித்துள்ளது. பலமுறை எச்சரித்தும், உரிமையாளர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து, மாடுகளை பிடித்து, அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. முதல்முறை பிடிபட்டால், 2,000 ரூபாய் அபராதமும், இரண்டாம் முறை பிடிபட்டால், மாடுகளை திருப்பி வழங்க முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. பிடிக்கப்படும் மாடுகள், சிங்கபெருமாள் கோவில் அருகேயுள்ள கொண்டமங்கலம் ஊராட்சி கோசாலையில் அடைக்கப்படுகின்றன.
இங்கு அடைக்கும் மாடுகளை, அபராத தொகையாக நாள் ஒன்றுக்கு, 2,240 ரூபாய் செலுத்தி அழைத்துச் செல்லலாம். ஏழு நாட்களுக்குள் மாடுகளை மீட்காவிட்டால், கொண்டமங்கலம் ஊராட்சியிலேயே பொது ஏலம் விடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், மாடுகளை பிடிக்க, மாநகராட்சியில் போதிய ஊழியர்கள் இல்லை. இதனால், தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட முடிவு செய்து, காஞ்சிபுரம், கூடுவாஞ்சேரி பகுதிகளில், ஏற்கனவே மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, 'கருக் ஷா கமாண்டோ போர்ஸ் பட்' என்ற நிறுவனத்திற்கு, ஆறு மாத காலத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், 10 ஊழியர்கள், ஒரு வேனை கொண்டு, நாள்தோறும் மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபடும். மேலும், தினமும் 10 மாடுகளை பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, ஒரு மாட்டிற்கு, 1,500 ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

