/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜூனியர் வளையப்பந்து தமிழக வீரர்கள் சாதனை
/
ஜூனியர் வளையப்பந்து தமிழக வீரர்கள் சாதனை
ADDED : பிப் 13, 2024 04:04 AM

சென்னை : இந்திய வளையப்பந்து கூட்டமைப்பு மற்றும் ராஜஸ்தான் மாநில வளையப்பந்து கழகம் இணைந்து நடத்திய, 40வது ஜூனியர் தேசிய வளையப்பந்து சாம்பியன்ஷிப், ராஜஸ்தான் மாநிலம், கரோலி மாவட்டத்தில் உள்ள மகாவீர்ஜியில் நடந்தது.
ஐந்து நாட்கள் நடந்த இப்போட்டியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, 20க்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. குழுவாகவும், தனிநபர், ஒற்றையர், தனிநபர் இரட்டையர் மற்றும் தனிநபர் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளாகவும் போட்டிகள் நடந்தன.
குழு பிரிவில் ஆடவரில், புதுச்சேரி அணியை எதிர்த்து விளையாடிய தமிழக அணி, 3 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கத்தை தட்டியது. பெண்கள் பிரிவில் தமிழக அணி, 3 - 0 என்ற கணக்கில் புதுச்சேரியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
தனிநபர் ஒற்றையர் போட்டியில், தமிழக வீரர்கள் ஹரி கிருஷ்ணன், தங்கம்; தமிழ் என்பவர் வெள்ளியும் வென்றனர். மாணவியரில் தமிழக அணியைச் சேர்ந்த வீராங்கனையர் மணிமொழிக்கு தங்கம், மஹேஸ்வரிக்கு வெள்ளி பதக்கங்கள் கிடைத்தன.
தனிநபர் இரட்டையர் இறுதிப் போட்டியில், தமிழக அணியைச் சேர்ந்த ஜோதி கேசவன் மற்றும் அனுமுத்து ஜோடி, ஆந்திர அணியை எதிர்த்து விளையாடி 2 - 0 என்ற புள்ளியில் தங்க பதக்கத்தை வென்றது.
மாணவியரில் தமிழகத்தின் யாஷிகா மற்றும் ஷ்ராவந்தி, 2 - 0 என்ற கணக்கில் கேரள அணியை வீழ்த்தி தங்கம் கைப்பற்றினர். தனிநபர் கலப்பு இரட்டையரில், தமிழகத்தின் இந்திரேஷ் மற்றும் மெக்லீன் ஜெசிந்தா ஜோடி, கர்நாடக அணியை, 0 - 2 என்ற கணக்கில் வென்று வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது.
அனைத்து போட்டிகள் முடிவில், தமிழக அணி குழு பிரிவில் இரண்டு தங்கமும்; தனிநபர் ஒற்றையரில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளியும்; தனிநபர் இரட்டையரில் நான்கு தங்கமும், கலப்பு இரட்டையரில் இரண்டு வெள்ளி பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.