/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்ட கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
/
செங்கை மாவட்ட கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
செங்கை மாவட்ட கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
செங்கை மாவட்ட கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
ADDED : ஏப் 14, 2025 11:59 PM

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கோவில்களில், தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று, சிறப்பு வழிபாடு நடந்தது.
திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மொட்டை அடித்தல் போன்ற நேர்த்திக் கடனையும் நிறைவேற்றினர்.
மாலை 5:00 மணிக்கு, பிரணவ மலை கைலாசநாதர் கோவில் சிறப்பு வழிபாடு நடந்தது.
உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் திருப்போரூர் பகுதி மாடவீதி, ஓ.எம்.ஆர்., சாலைகளில் பக்தர்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதேபோல், செம்பாக்கம் ஜெம்புகேஸ்வரர் கோவில், நெல்லிக்குப்பம் வேண்டவராசியம்மன் கோவில், புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் கோவில், செங்கண்மால் செங்கண்மாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடந்தது.
* மாமல்லபுரம்
மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் ஸ்தலசயன பெருமாள், தேவியர், நிலமங்கை தாயார், பூதத்தாழ்வார் ஆகியோருக்கு, காலை சிறப்பு அபிஷேகத்துடன் திருமஞ்சன வழிபாடு நடந்தது.
அதைத்தொடர்ந்து, சுவாமியர் சிறப்பு அலங்காரத்தில் தோன்றி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர், கல்பாக்கம் நகரியம் ஏகாம்பரேஸ்வரர், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* மேல்மருவத்துார்
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மங்கள இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
குருபீடத்தில், ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் திருவுருவ சிலைக்கு சிறப்பு பூஜையும், தமிழ் புத்தாண்டு விழாவும், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார், செவ்வாடை பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் அன்பழன், அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
விழா ஏற்பாடுகளை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
* சுற்றுலா பயணியர் குஷி
செய்யூர் அருகே முதலியார்குப்பம் கிராமத்தில், கழிவெளிப் பகுதியில், 'ரெயின் ட்ராப் போட் ஹவுஸ்' உள்ளது.
தொடர் விடுமுறை மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று, 700க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன், இந்த போட்-ஹவுஸிற்கு வந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
- நமது நிருபர் குழு -