/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெருங்களத்துார், பீர்க்கன்காரணைக்கு பாலாற்று குடிநீர் வழங்க 'டெண்டர்'
/
பெருங்களத்துார், பீர்க்கன்காரணைக்கு பாலாற்று குடிநீர் வழங்க 'டெண்டர்'
பெருங்களத்துார், பீர்க்கன்காரணைக்கு பாலாற்று குடிநீர் வழங்க 'டெண்டர்'
பெருங்களத்துார், பீர்க்கன்காரணைக்கு பாலாற்று குடிநீர் வழங்க 'டெண்டர்'
ADDED : நவ 17, 2024 09:53 PM
பெருங்களத்துார்:பீர்க்கன்காரணை - பெருங்களத்துார் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, பாலாறு குடிநீர் வினியோகம் செய்ய, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 99 லட்சம் ரூபாய் செலவில், தாம்பரம் - முடிச்சூர் சாலையில் இருந்து, இரண்டு இடங்களில் குழாய் பதிக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டத்தில், பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை பகுதிகள் உள்ளன. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதிகள் பேரூராட்சியாக இருந்தபோது, முடிச்சூர் சாலை வழியாக செல்லும் பாலாறு குழாயில் இருந்து இணைப்பு கொடுத்து, ராஜிவ்காந்தி தெரு, திருவள்ளுர் தெரு, பெருமாள் கோவில் தெரு ஆகிய இடங்களில், பாலாறு குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
அப்போது, பெருங்களத்துார், பீர்க்கன்காரணை பகுதி மக்கள், இந்த இடங்களில் பாலாறு தண்ணீரை பிடித்து சென்று, குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.
அருகேயுள்ள பகுதிகளில் இருந்து வந்தும் பிடித்து சென்றனர். மக்களுக்கு பயனுள்ளதாக இருந்த பாலாறு குடிநீர் வினியோகத்தை, திடீரென நிர்வாகம் நிறுத்தியது.
இதற்கிடையே, தாம்பரம் மாநகராட்சியுடன் இப்பகுதிகள் இணைக்கப்பட்டு, 55, 56, 57, 58, 59, 61 ஆகிய ஆறு வார்டுகளாக பிரிக்கப்பட்டன.
மாநகராட்சியுடன் இணைத்தாலும் போதிய குடிநீர் வசதியில்லை; வரி மட்டும் முறையாக செலுத்தி வருகிறோம் என, அப்பகுதியினர் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், மீண்டும் பாலாறு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
தேர்தலின்போது, தி.மு.க., கவுன்சிலர்கள், வெற்றி பெற்றால், பாலாறு குடிநீர் கொண்டு வருவதாக வாக்குறுதியும் அளித்தனர். வெற்றி பெற்ற பின், அவர்கள் அதை கண்டுகொள்ளவே இல்லை எனவும், குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை பகுதிகளுக்கு பாலாறு குடிநீர் வழங்க, தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தாம்பரம் - முடிச்சூர் சாலை வழியாக செல்லும் பாலாறு குடிநீர் பிரதான குழாயில் இருந்து, இரண்டு இடங்களில் உள்ள தொட்டிகளுக்கு இணைப்பு கொடுத்து, அதன் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்ய, நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தாம்பரம் - முடிச்சூர் சாலையில், பெருங்களத்துார், பத்மாவதி திருமண மண்டபத்தில் இருந்து பார்வதி நகர் தொட்டிக்கு, 41 லட்சம் ரூபாய் செலவில், 1.3 கி.மீ., துாரத்திற்கும், அதே இடத்தில் இருந்து காமராஜர் நெடுஞ்சாலை, ஏரிக்கரை தெருவில் உள்ள தொட்டிக்கு, 58 லட்சம் ரூபாய் செலவில் 2.5 கி.மீ., துாரத்திற்கும் குழாய் பதிக்கப்பட உள்ளது.
இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதால், விரைவில் பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழாய் பதிக்கும் பணி முடிந்தவுடன், இந்த இரண்டு தொட்டிகளிலும் பாலாறு தண்ணீரை நிரப்பி, மக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பீர்க்கன்காரணையின் ஒரு பகுதியான 61வது வார்டு, ஜி.எஸ்.டி., சாலைக்கு கிழக்கு பகுதியில் உள்ளது.
அப்பகுதிக்கு, முடிச்சூர் சாலையில் இருந்து குழாயை எடுத்து செல்ல முடியாது. அதனால், அப்பகுதியை ஒட்டியுள்ள, 5வது மண்டலம், அருள் நகர் வரை குடிநீர் இணைப்பு உள்ளது.
அருள் நகரில் இருந்து பீர்க்கன்காரணை ஸ்ரீராம் நகர் வரை புதிதாக இணைப்பு கொடுத்து, அப்பகுதி மக்களுக்கு பாலாறு குடிநீர் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிதி கேட்டு, அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.