/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை முருகன் கோவில்களில் தைப்பூசம் விமரிசை
/
செங்கை முருகன் கோவில்களில் தைப்பூசம் விமரிசை
ADDED : ஜன 25, 2024 11:15 PM

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், தைப்பூசத்தையொட்டி, பக்தர்கள் பால் குடங்கள் எடுத்து பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இந்தாண்டு விழா நேற்று நடந்தது. அதிகாலை 4 மணி முதல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் சரவணப்பொய்கையில் நீராடி கந்தனை வழிபட்டனர்.
மொட்டை அடித்தல், காது குத்துதல், திருமணம், துலாபாரம் மேற்கொண்டும் பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.
நுாற்றுக்கணக்கான பக்தர்கள், வேம்படி விநாயகர் கோவிலிலிருந்து அலகு குத்தி, காவடி எடுத்து, பால் குடம் சுமந்து புறப்பட்டனர்.
ஓ.எம்.ஆர்., சாலை, செங்கல்பட்டு சாலை, இள்ளலுார் சாலை என, கிரிவலம் வந்து, கந்தனுக்கு அபிஷேகம் செய்தனர்.
அதேபோல், கோவிலில் நேற்று நாள் முழுதும் அன்னதானம், பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்ததுது.
தைப்பூச தெப்போற்சவம்
விழாவில், இரவு 7:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி, தெய்வானையுடன் கந்தசுவாமி சரவணப்பொய்கையில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் குளத்தில் கற்பூரம் ஏற்றி கந்தனை வழிபட்டனர்.
மாசி உற்சவ பந்தக்கால்
இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ பெருவிழா, வரும் பிப்., 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதற்காக, கோவில் வளாகத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பந்தக்காலுக்கு பல்வேறு பூஜைகள் செய்து, தீபாராதனை காட்டபட்டு, காஞ்சிபுரம் இணை ஆணையர் வான்மதி, கோவில் செயல் அலுவலர் குமரவேல், அர்ச்சகர்கள் முன்னிலையில், பந்தக்கால் நடப்பட்டது.
முள்ளிக்குளத்துார்
திருக்கழுக்குன்றம் அடுத்த முள்ளிகுளத்துார் பகுதியில் உள்ள வள்ளி, தெய்வானை உடனுறை முத்துகுமார சுவாமி கோவிலில், தைப்பூச நாளான நேற்று, ஐந்தாம் ஆண்டு உற்சவமாக, தேர் உலா விழா நடந்தது.
கயிலாய வாத்தியங்கள் முழங்க, தேரின் முன் விநாயகர் சென்றார். வள்ளி, தெய்வானை உடனுறை முத்துகுமார சுவாமி, தேரில் பவனி வந்தார்.
பக்தர்கள், 'முருகனுக்கு அரோகரா' என கோஷமிட்டு, வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோவிலில் மூன்று வேளை அன்னதானம் வழங்கப்பட்டது.
பெருக்கரணை
பெருக்கரணை மரகத தண்டாயுதபாணி திருக்கோவிலில், நேற்று தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு, காலை 8:30 மணிக்கு கலச பூஜைகள், கணபதி யாகம் நடந்தன.
காலை 9:30 மணிக்கு, பால்குடம் புறப்பாடு நடந்தது. இதில், 108 பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள், மலை அடிவாரத்தை சுற்றி வந்து, பின் 10:00 மணிக்கு, மரகத தண்டாயுதபாணிக்கு பால் அபிஷேஹகம் செய்யப்பட்டது.
பின், 11:30 மணிக்கு, விசேஷ அலங்காரம் செய்யப்பட்ட மரகத தண்டாயுதபாணிக்கு, மஹா தீப ஆராதனை காட்டப்பட்டது.
இதில், பெருக்கரணை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி சுவாமியை வழிபட்டனர்.
மறைமலை நகர்
மறைமலைநகர் செல்வமுத்துக்குமார சுவாமி கோவிலில், நேற்று காலை 7 மணிக்கு, கலச பூஜை, கணபதி யாகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, பக்தர்கள் 108 பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்தனர். வள்ளி, தெய்வானை உடனுறை முத்துக்குமாரசுவாமிக்கு, பால் மற்றும் பன்னீரில் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின், சுவாமிக்கு சந்தனக் காப்பு அலங்காரத்தில், தீபாராதனை நடத்தப்பட்டது.
அதே போல, சிங்கபெருமாள் கோவிலில் உள்ள பழமையான சிங்கை சிங்காரவேலன் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது.
அன்னதானம்
அச்சிறுபாக்கம் அருகே கடமலைப்புத்துாரில் உள்ள சுத்த சன்மார்க்க சங்கத்தின் சார்பில், வள்ளலாரின் திருவுருவப் படத்திற்கு மலர் துாவி, தீபஜோதி ஏற்றப்பட்டது.
பின், வள்ளலாரின் பிரதான கொள்கையான 'ஏழைகளுக்கு உணவளித்தல்' என்ற அமுத மொழிக்கு ஏற்ப, காலையில் 500 பேருக்கும், மதியம் 500 பேருக்கும் என, அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை, மதுராந்தகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவசக்தி துவங்கி வைத்தார்.
-நமது நிருபர்கள் குழு-

