/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள்கோவில் மின்வாரிய ஆபீசில் நிரந்தர பொறியாளர் இல்லாததால் பாதிப்பு
/
சிங்கபெருமாள்கோவில் மின்வாரிய ஆபீசில் நிரந்தர பொறியாளர் இல்லாததால் பாதிப்பு
சிங்கபெருமாள்கோவில் மின்வாரிய ஆபீசில் நிரந்தர பொறியாளர் இல்லாததால் பாதிப்பு
சிங்கபெருமாள்கோவில் மின்வாரிய ஆபீசில் நிரந்தர பொறியாளர் இல்லாததால் பாதிப்பு
ADDED : டிச 04, 2024 11:06 PM

சிங்கபெருமாள் கோவில்,
சிங்கபெருமாள் கோவில் மின் வாரிய அலுவலகம், சிங்கபெருமாள் கோவில் பொது நுாலகம் எதிரிலுள்ள தனியார் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
இதன் கீழ் சிங்கபெருமாள் கோவில், செங்குன்றம், கருநிலம், கொண்டமங்கலம், ஆப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள குடியிருப்புகள், தொழிற்சாலை, விவசாயம் வர்த்தக நிறுவனங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த அலுவலகத்தில், கடந்த 2023 மே மாதம் முதல் மின் பொறியாளர் இல்லாததால், பல்வேறு குழப்பங்கள் மற்றும் பணிகள் பாதிப்படைந்து வருவதாக, நுகர்வோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது குறித்து, நுகர்வோர் கூறியதாவது:
கடந்த 2023ம் ஆண்டு இந்த அலுவலகத்திற்கு உட்பட்ட ஆப்பூர், சிங்கபெருமாள் கோவில் பகுதிகளில், புறம்போக்கு நிலங்களில் உள்ள வீடுகளுக்கு முறைகேடாக மின் இணைப்பு வழங்கப்பட்டது தொடர்பாக, உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதன் பின் மறைமலைநகர், செட்டிபுண்ணியம் மின்வாரிய அலுவலக பொறியாளர்கள், இங்கு பொறுப்பு பொறியாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.
தற்போது, செங்கல்பட்டு டவுன் மின் வாரிய அலுவலக உதவி பொறியாளர், சிங்கபெருமாள் கோவில் மின் வாரிய அலுவலகத்திற்கு பொறுப்பு உதவி பொறியாளராக, கடந்த ஆறு மாதங்களாக இருந்து வருகிறார்.
நிரந்தர உதவி பொறியாளர் இல்லாததால், புதிய மின் மீட்டர் பெறுதல், மின்கம்பம் மாற்றியமைப்பு போன்ற பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
மேலும், மின் வாரிய அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகள், ஒரு பணிக்கு வரும் மின் பொருட்களை, தங்களுக்கு வேண்டியவர்களின் பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் கூட, சிங்கபெருமாள் கோவில் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் என கூறி மின் பொருட்களை வாங்கி வந்து, தனியார் துணிக்கடைக்கு மின்மாற்றி பொருத்தி உள்ளனர்.
அதே சிங்கபெருமாள்கோவில் ஜி.எஸ்.டி., சாலையில், புதிதாக அமைய உள்ள தனியார் மருத்துவமனைக்கு, நுகர்வோர் ஒருவர், 100 ஹாம்ஸ் திறன் கொண்ட மின் மாற்றியுடன் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
இது இல்லாததால், சத்யா நகர் பகுதியிலுள்ள அரசு கட்டடத்திற்கு மின்சாரம் செல்ல அமைக்கப்பட்டு இருந்த, 100 ஹாம்ஸ் திறன் கொண்ட பழைய மின் மாற்றியை கழற்றி எடுத்து, அருகிலுள்ள வனப்பகுதியில் வைத்து பெயின்ட் அடித்து, புதிது போல தனியார் மருத்துவமனைக்கு கடந்த வாரம் பொருத்தி உள்ளனர்.
தற்போது அந்த அரசு கட்டடத்தில், குறைந்த மின் அழுத்த பிரச்னை ஏற்பட்டு வருகிறது. அதே போல பல கிராமங்களில், மின் கம்பிகள் மீது கொடிகள், மரக்கிளைகள் படர்ந்து காணப்படுகின்றன. வீராபுரம் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து சிங்கபெருமாள் கோவில் வரும் மின் தடங்களின் இடையே வளர்ந்துள்ள மரங்கள் வெட்டப்படவில்லை. அதே போல திருத்தேரி, பாரேரி, கொண்டமங்கலம் போன்ற பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளில் செடிகள் படர்ந்து காணப்படுகின்றன.
இதனால் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். மாலை மற்றும் இரவு நேரங்களில் மின் தடை ஏற்படும் போது, ஊழியர்கள் உடனடியாக வந்து சரி செய்யாமல், அடுத்த நாளே வருகின்றனர்.
சிங்கபெருமாள் கோவில் மின் வாரிய அலுவலகத்திற்கு மின் கம்பம் மாற்றுதல், பழுதடைந்த மீட்டர் மாற்றுதல் என, எந்த புகார் அளிக்க சென்றாலும், பொருட்கள் இல்லை என்ற பதிலையே நீண்ட காலமாக கூறி வருகின்றனர்.
மின் வாரிய அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று வருவதால் வீண் அலைச்சல் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நகர மாட்றாங்க...
அரசு ஊழியர்கள், மூன்று ஆண்டுகள் மட்டுமே ஒரே அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், சிங்கபெருமாள் கோவில் மின் வாரிய அலுவலகத்தில் உள்ள பல அதிகாரிகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளனர். சிலர் இடமாற்றமாகி வேறு அலுவலகம் சென்றாலும், எப்படியாவது மீண்டும் இதே அலுவலகத்திற்கு வருகின்றனர். ஒரு சிலர் பதவி உயர்வு கிடைத்தாலும், அந்த பணிக்கு செல்லாமல், இந்த அலுவலகத்திலேயே பணியில் உள்ளனர்.
- சமூக ஆர்வலர்கள்,
சிங்கபெருமாள் கோவில்.