/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரத்திலுள்ள பழங்கால கோனேரி சுற்றுலாவிற்கு மேம்படுத்துவது அவசியம்
/
மாமல்லபுரத்திலுள்ள பழங்கால கோனேரி சுற்றுலாவிற்கு மேம்படுத்துவது அவசியம்
மாமல்லபுரத்திலுள்ள பழங்கால கோனேரி சுற்றுலாவிற்கு மேம்படுத்துவது அவசியம்
மாமல்லபுரத்திலுள்ள பழங்கால கோனேரி சுற்றுலாவிற்கு மேம்படுத்துவது அவசியம்
ADDED : ஏப் 03, 2025 02:16 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள பழங்கால கோனேரி ஏரி முற்றிலும் துார்ந்து, கொடிகள் சூழ்ந்து சீரழிந்து வருகிறது. தொல்லியல் பகுதியில் உள்ள இந்த ஏரியை, சுற்றுலாவிற்கேற்ப மேம்படுத்த வேண்டுமென, இப்பகுதியினர் மற்றும் சுற்றுலா பயணியரிடம் எதிர்பார்க்கின்றனர்.
மாமல்லபுரத்தில் பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. உள்நாடு, சர்வதேச பயணியர் கண்டு ரசிக்கின்றனர். பாறைக்குன்று குடவரைகள் பின்னணியில், பழங்கால கோனேரியும் இங்கு அமைந்துள்ளது.
இந்த ஏரி, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நீளமான பாறைக்குன்றுக்கு இணையாக நீண்டுள்ளது.
அதன் கிழக்கு பகுதியில் உள்ள குன்றில் குடவரைகள், பசுமை தாவரங்கள், பல்லவர் கால மற்றும் தற்போதைய கலங்கரை விளக்கங்கள் ஆகியவை உள்ளன.
மேற்கு கரைப்பகுதியில், பொதுப்பணித் துறை பயணியர் மாளிகை வளாகம் அமைந்துள்ளது. தொல்லியல் மற்றும் பொதுப்பணித் துறை வளாகங்களுக்கு இடையே, இந்த ஏரி உள்ளது.
பாறைக்குன்று, குடவரை, இயற்கை தாவர சூழலில் இந்த ஏரி அமைந்திருப்பது, பயணியரை கவர்கிறது. பல்லவர் காலத்தில் இந்த கோனேரி ஏரி உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
'கோ' என்பது அரசனைக் குறிக்கும் என்பதால், 'கோனேரி' என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.
ஏழு ஏக்கர் பரப்பும், 10 மீ., ஆழமும் கொண்டுள்ள இந்த ஏரி, எந்த துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்ற குழப்பம் நீடித்ததால், நீண்டகாலமாக பராமரிக்கப்படாமல் முற்றிலும் துார்ந்தது.
இதை துார் வாரி, சுற்றுலாவிற்கேற்ப மேம்படுத்துவது குறித்து, நம் நாளிதழில், தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி,- சீன அதிபர் ஷீ ஜின்பிங், கடந்த 2019ல், முறைசாரா மாநாடாக மாமல்லபுரத்தில் சந்தித்ததை முன்னிட்டு, ஏரியை துார் வாரி பராமரிக்க, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
சென்னையைச் சேர்ந்த இ.எப்.ஐ., எனப்படும் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை தன்னார்வ நிறுவனம், நீர்நிலை அருங்காட்சியகமாக இந்த ஏரியை மேம்படுத்த முடிவெடுத்து, மூன்றடி ஆழம் துார் வாரியது.
ஏரிக்கரையை உயர்மட்டம், தாழ்மட்டம் என அமைத்தது. உயர்மட்ட கரையில் மண் சரிந்தாலும், தாழ்மட்டத்தில் குவிந்து, ஏரியில் குவிந்து துார்க்காதவாறு அமைக்கப்பட்டது.
நீர் வாழ் உயிரினங்களின் புகலிடமாக உருவாக்க கருதி, நிலைத்த நீரோட்ட சூழலுக்காக, மூங்கில் உள்ளிட்ட தாவரங்களை, கரையைச் சுற்றிலும் வளர்க்கவும் முடிவெடுக்கப்பட்டது.
தனிப்பட்ட சிலரின் குறுக்கீடால், அந்த நிறுவனம் அதிருப்தியடைந்து, துார் வாரியதோடு, இத்திட்டத்தை கைவிட்டது.
தற்போது மீண்டும் ஏரி துார்ந்து, தாமரை உள்ளிட்ட கொடிகள் வளர்ந்து, கரையில் சீமை கருவேல மரங்கள் படர்ந்து உள்ளன.
மாமல்லபுரம் பகுதியில் சிற்பங்களை காணும் பயணியருக்கு, வேறு பொழுதுபோக்கு இடம் இல்லை.
இந்த கோனேரி ஏரியை துார் வாரி பராமரித்து, சுற்றுலாவிற்கேற்ப மேம்படுத்தினால், பயணியருக்கு பயனளிக்கும்.
அதன் கரையில் பசுமை புல்வெளி, நிழல் தரும் குறுமரங்கள், வண்ண மலர்ச் செடிகள், இருக்கைகள், மின்விளக்குகள், கற்களில் நடைபாதை என அமைத்து மேம்படுத்தலாம்.
சுற்றுலாவிற்கேற்ப மேம்படுத்துமாறு, சுற்றுலா ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், அரசு புறக்கணிக்கிறது.
கடந்த ஆண்டு, கலெக்டர் அருண்ராஜ், இ.எப்.ஐ., எனும் தனியார் நிறுவன நிர்வாகிகளுடன் ஏரியை பார்வையிட்டு, அதன் பரப்பை அளவிட்டு, அதே நிறுவனம் பராமரிக்க அறிவுறுத்தினார். ஆனால், அதிகாரிகளின் மெத்தனத்தால் இத்திட்டம் கிடப்பில் உள்ளது.
இதுகுறித்து, சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது:
கோனேரியை, பல்லவர்கள் உருவாக்கியதாக கருதப்படுகிறது. இயற்கையான ரம்மிய சூழலில் உள்ள ஏரியை, முக்கியத்துவம் உணராமல் அரசு அலட்சியப்படுத்துகிறது.
சுற்றுலா பயணியர் பொழுதுபோக்கு கருதி, இதை பராமரித்து மேம்படுத்தலாம். நீர் நிரம்பி இருக்கும் போது, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், பயணியரே காலால் மிதிக்கும் படகுகளை இயக்கலாம். குளிர்ந்த காற்று சூழலில் இளைப்பாறலாம். உள்ளூர் மக்கள் நடைபயிற்சி செல்லலாம். சுற்றுப்புற பகுதி நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே, பாரம்பரிய குடவரை பகுதி சூழலில் உள்ள ஏரியை, சுற்றுலாவிற்கு மேம்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

