/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் அருகே இறைச்சி கடை அகற்ற கோரிய வழக்கு வாபஸ்
/
கோவில் அருகே இறைச்சி கடை அகற்ற கோரிய வழக்கு வாபஸ்
ADDED : மார் 14, 2024 11:08 PM
சென்னை:சென்னை, சூளை மாடோஸ் தெருவில், பிஸ்மி மட்டன் ஸ்டால் என்ற இறைச்சி கடை உள்ளது. இந்த கடையில் இருந்து 30 மீட்டர் துாரத்தில் ஜெயின் கோவில் உள்ளது.
கோவிலுக்கு அருகே உள்ள இறைச்சி கடையை அகற்ற உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பரஸ்மால் டாட்டியா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
மனு விபரம்:
சூளை ஜெயின் கோவில் மிகவும் புகழ்பெற்றது. கோவிலில் உள்ள மகாவீரரை, 1,000த்துக்கும் மேற்பட்டோர் வழிபட்டு வருகின்றனர். தினமும் பூஜை, வழிபாடுகள் நடக்கின்றன.
கோவிலை சுற்றி, 5,000 பக்தர்கள் வரை வசிக்கின்றனர். கோவிலுக்கு அருகில் இறைச்சி கடை வைக்க, துவக்கத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்தோம்.
அந்த கடைக்கு உரிமம் வழங்கக்கூடாது என, மாநகாட்சி அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும், உரிமம் கொடுக்கப்பட்டது.
கடையில் ஆடுகளை தொங்க விடுவதோடு, இறைச்சி கழிவுகளை சரிவர அப்புறப்படுத்துவது இல்லை. இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. சைவ உணவு பழக்க வழக்கத்தை பின்பற்றும் ஜெயின் சமுதாயத்தினரின் உணர்வுகளுக்கு, இது எதிராக உள்ளது.
எனவே, அந்த கடையை வேறு இடத்துக்கு மாற்ற, அதிகாரிகளுக்கு மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. இறைச்சி கடை உரிமத்தை ரத்து செய்வதோடு, கோரிக்கையை பரிசீலிக்கவும் கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி அடங்கிய, முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோவில் அருகே இறைச்சி கடை அமைக்கக்கூடாது என, எந்த ஒரு சட்டமும், விதிகளும் இல்லாதபோது, அரசியல் அமைப்பு சட்டம் தொழில் செய்ய வழங்கிய உரிமையில், எப்படி நீதிமன்றம் தலையிட முடியும் என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, இந்த வழக்கை திரும்ப பெறுவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி நிவாரணம் பெறவிருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

