/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் காவல் நிலைய புது கட்டடம் திறப்பு வீடியோ கான்பரன்சில் முதல்வர் திறந்தார்
/
கிளாம்பாக்கம் காவல் நிலைய புது கட்டடம் திறப்பு வீடியோ கான்பரன்சில் முதல்வர் திறந்தார்
கிளாம்பாக்கம் காவல் நிலைய புது கட்டடம் திறப்பு வீடியோ கான்பரன்சில் முதல்வர் திறந்தார்
கிளாம்பாக்கம் காவல் நிலைய புது கட்டடம் திறப்பு வீடியோ கான்பரன்சில் முதல்வர் திறந்தார்
ADDED : ஆக 06, 2025 02:10 AM

கிளாம்பாக்கம்:கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு, 18.26 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய காவல் நிலைய அலுவலகத்தை, முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்த பின், பேருந்து முனையம் உள்ளே, 2024 ஜனவரியில் புதிய காவல் நிலையம் துவக்கப்பட்டது.
துரிதகதியில் துவக்கப்பட்டதால், கிளாம்பாக்கம் காவல் நிலையம் உரிய இட வசதியுடன் அமைக்கப்படவில்லை. இது குறித்து, காவல் துறை உயரதிகாரிகளுக்கு பல புகார்கள் வந்தன.
எனவே, கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புதிய அலுவலகம் கட்ட, காவல் துறை உயரதிகாரிகள் முடிவெடுத்தனர்.
அதன்படி, 11.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மூன்று தளங்கள் உள்ள, அதிநவீன காவல் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, சி.எம்.டி.ஏ., வாயிலாக, 2024, செப்டம்பரில் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டன.
இந்நிலையில் கட்டுமான பொருட்கள் விலை உயர்வால், கூடுதலாக 6.86 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மொத்தம் 18.26 கோடி ரூபாயில் அனைத்து கட்டுமான பணிகளும், கடந்த மாதம் முடிவுக்கு வந்தன.
இதையடுத்து, கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கான புதிய அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
காவல் துறை உயரதிகாரிகள் நேரில் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
கிளாம்பாக்கம் காவல் நிலையத்தின் கீழ் கிளாம்பாக்கம், காரணை- புதுச்சேரி, ஐயஞ்சேரி, ஊனமாஞ்சேரி, வண்டலுார் பூங்கா ஆகிய பகுதிகள் வருகின்றன. புதிய கட்டடத்தில், சட்டம் - ஒழுங்கு, குற்றப் பிரிவு, போக்குவரத்து, போக்குவரத்து புலனாய்வு, மகளிர் காவல் நிலையம் மற்றும் உதவி கமிஷனர் அலுவலகம் ஆகியவை செயல்பட உள்ளன.
விசாலமான 'பார்க்கிங்' வசதியுடன், ஒரே கட்டடத்தில் அனைத்து பிரிவு காவல் நிலையங்களும் அமைய உள்ளதால், புகார்தாரர்களுக்கு அலைச்சலும், நேர விரயமும் மிச்சமாகும்.