ADDED : நவ 11, 2024 02:29 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில், அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு மருத்துவமனை அருகில், அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது.
அதன் பெரும்பான்மை பகுதியை ஆக்கிரமித்து வளைத்தவர்கள், வீட்டுமனைகளாக விற்றுள்ளனர். எஞ்சியுள்ள பகுதியில், தீயணைப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியினர் எதிர்ப்பால் முடங்கியது.
அதே பகுதி அரசியல் பிரமுகர், விளையாட்டு திடல் ஏற்படுத்த, பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நரிக்குறவர், இருளர் குடியிருப்பு பகுதியை ஒட்டிய பகுதியில், பேரூராட்சி நிர்வாகம் கம்பி வேலி தடுப்பு அமைத்து, கான்கிரீட் இருக்கைகள் அமைத்தது.
நேற்று, செங்கல்பட்டு வன விரிவாக்க மையம் சார்பில், நிழல் தரும் மரங்களான புங்கன், நீர்மருது, நீர்பருத்தி உள்ளிட்ட எட்டு வகைகளில், 150 கன்றுகள் நடப்பட்டன. பேரூராட்சி மன்ற தலைவர் வளர்மதி, சுகாதார ஆய்வாளர் ரகுபதி, வனவர் வெங்கட்ராஜன் ஆகியோர் நட்டனர்.