/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவில் சாலை ஆக்கிரமிப்பால் தொடரும் அவதி
/
சிங்கபெருமாள் கோவில் சாலை ஆக்கிரமிப்பால் தொடரும் அவதி
சிங்கபெருமாள் கோவில் சாலை ஆக்கிரமிப்பால் தொடரும் அவதி
சிங்கபெருமாள் கோவில் சாலை ஆக்கிரமிப்பால் தொடரும் அவதி
ADDED : ஜன 20, 2025 11:35 PM

மறைமலைநகர், புறநகர் பகுதிகளில் வேகமாக வளர்ந்து வரும் ஊராட்சிகளில், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி முக்கியமானது.
இங்கு தென் மாவட்டங்களில் இருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்கி ஒரகடம், மறைமலைநகர், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், சுற்றியுள்ள கொண்டமங்கலம், அஞ்சூர், தென்மேல்பாக்கம், அனுமந்தபுரம், ஆப்பூர், திருக்கச்சூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் கல்வி, வங்கி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகளுக்கு, இங்கு வந்து செல்கின்றனர்.
சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலை, 9 கி.மீ., துாரம் கொண்டது. இச்சாலையில் 2 கி.மீ., துாரம் பஜார் வீதி உள்ளது.
இதில் இருபுறமும், 100க்கும் மேற்பட்ட கடைகள், இரு தனியார் மருத்துவமனைகள் உள்ளன.
மேலும் இந்த சாலையில், பழமையான பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது.
கோவில் மற்றும் மருத்துவமனைகளுக்கு வருவோர், தங்களின் இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோக்களை சாலை ஓரம் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.
இதன் காரணமாக, காலை மற்றும் மாலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் இடையே சண்டை ஏற்படுகிறது.
முதியவர்கள், பெண்கள், பள்ளி குழந்தைகள் என, நடந்து செல்லும் பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த பகுதியில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில், முறையான வாகன நிறுத்தம் வசதி இல்லாததால், சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவது பல ஆண்டுகளாக தொடர்கிறது.
இந்த கோவிலில் இரண்டு மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வதால் நெரிசல் தொடர்கிறது.
இங்கு நிலவும் நெரிசலை தடுக்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மாலை நேரங்களில் அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்வதால், அனுமந்தபுரத்தில் இருந்து வெளியே வரும் வாகனங்களை, அருகில் உள்ள மண்டப தெரு வழியாக மாற்றிவிட்டால், போக்கு வரத்து நெரிசல் பெருமளவு குறைய வாய்ப்பு உள்ளது.
அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.