/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஸ்தலசயனர் கோவில் திருத்தேருக்கு இரும்பு சக்கரம் பொருத்த அளவீடு
/
ஸ்தலசயனர் கோவில் திருத்தேருக்கு இரும்பு சக்கரம் பொருத்த அளவீடு
ஸ்தலசயனர் கோவில் திருத்தேருக்கு இரும்பு சக்கரம் பொருத்த அளவீடு
ஸ்தலசயனர் கோவில் திருத்தேருக்கு இரும்பு சக்கரம் பொருத்த அளவீடு
ADDED : பிப் 15, 2025 07:56 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் தேருக்கு, இரும்பு சக்கரங்கள் பொருத்த அளவிடப்பட்டது.
ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.
வைணவ சமய 108 திவ்ய தேசங்களில், 63ம் கோவிலாக சிறப்பு பெற்றது.
இக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவத்தில், ஏழாம் நாள் உற்சவமாக ஸ்தலசயன பெருமாள் அவதார ஜெயந்தி உற்சவத்தில், ஒன்பதாம் நாள் உற்சவமாக பூதத்தாழ்வார் ஆகியோர் திருத்தேரில் உலா செல்வர்.
சென்னை பக்தர் ஒருவர், 15 ஆண்டுகளுக்கு முன், திருத்தேரை நன்கொடையாக அளித்தார். அதன் நான்கு சக்கரங்கள் மரத்தாலானவை என்பதால், திருவிழாவின் போது பராமரிக்கப்படும்.
தற்போது திருத்தேர் உலாவின் போது, தேரின் உறுதித்தன்மை சான்றை, பொதுப்பணித் துறையிடம் பெறுவது அவசியம். மரச் சக்கரம் என்பதால், அத்துறை சான்று அளிக்க தயங்குகிறது.
இதையடுத்து, தேரின் நான்கு மர சக்கரங்களையும் அகற்றி, புதிதாக இரும்பு சக்கரங்கள் பொருத்த, தனியார் நிறுவன ஊழியர்கள், நேற்று சக்கரங்களை அளவிட்டனர்.
தேரின் உயரம், எடை ஆகியவற்றுக்கேற்ப, இரும்பு சக்கரங்கள் தயாரிக்கப்படும்.
இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:
மர சக்கரங்களை கொண்டுள்ள திருத்தேர்களுக்கு, உறுதி தன்மை கருதி, இரும்பு சக்கரங்கள் பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, பொதுப்பணித்துறை சார்பில் இரும்பு சக்கரங்கள் பொருத்த, 'பெல்' நிறுவனத்தினர் அளவிட்டனர். ஆளவந்தார் அறக்கட்டளை இதற்காக செலவிடும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

