/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூங்காவை ஆக்கிரமித்து கடைகள் ஊரப்பாக்கத்தில் தொடரும் அடாவடி
/
பூங்காவை ஆக்கிரமித்து கடைகள் ஊரப்பாக்கத்தில் தொடரும் அடாவடி
பூங்காவை ஆக்கிரமித்து கடைகள் ஊரப்பாக்கத்தில் தொடரும் அடாவடி
பூங்காவை ஆக்கிரமித்து கடைகள் ஊரப்பாக்கத்தில் தொடரும் அடாவடி
ADDED : டிச 14, 2024 11:58 PM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி 10வது வார்டுக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ரயில் நிலையம் மேற்கு பகுதியில், சுவாமி நகர் உள்ளது. இப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன், காந்தி சிறுவர் பூங்கா இருந்தது.
இந்த பூங்கா அமைந்துள்ள இடம், சுவாமி நகர் குடியிருப்புவாசிகளுக்கு சொந்தமானது. இந்த இடத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக காந்தி சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.
நாளடைவில், உரிய பராமரிப்பு இல்லாததால், பூங்கா சிதிலமடைந்தது. அதைத் தொடர்ந்து பூங்காவை ஆக்கிரமித்து ஆட்டோ நிறுத்தம், மீன், இறைச்சி, சிக்கன் கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் என, 25க்கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்பட்டு, வியாபாரம் நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பூங்காவிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
காந்தி சிறுவர் பூங்காவை முறையாக பராமரிக்காததால், தற்போது ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.
பூங்காவில், தற்போது 25க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்த கடைகளுக்கு, அரசியல் கட்சியினர் வாடகை வசூலித்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள இந்த கடைகளை அகற்றி, மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். அதில் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள தேவையான வசதிகளை செய்து கொடுக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.