/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலை நகர் பகுதியில் மோட்டார் அமைத்து தெரு குழாய்களில் தண்ணீர் உறிஞ்சுவது அதிகரிப்பு
/
மறைமலை நகர் பகுதியில் மோட்டார் அமைத்து தெரு குழாய்களில் தண்ணீர் உறிஞ்சுவது அதிகரிப்பு
மறைமலை நகர் பகுதியில் மோட்டார் அமைத்து தெரு குழாய்களில் தண்ணீர் உறிஞ்சுவது அதிகரிப்பு
மறைமலை நகர் பகுதியில் மோட்டார் அமைத்து தெரு குழாய்களில் தண்ணீர் உறிஞ்சுவது அதிகரிப்பு
ADDED : மே 23, 2025 02:47 AM
மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு குழாய்களில் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சப்படுவதை தடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் வாயிலாக உருவாக்கப்பட்டு, தற்போது சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 19,168 வீடுகள் உள்ளன. இதில் 80,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இது கடந்த 14 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்து உள்ளது.
இந்த நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில், 6 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு கூடுவாஞ்சேரி பாலாறு கூட்டுக் குடிநீர் திட்டம் வாயிலாக, 6.24 லட்சம் குடிநீர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக 24.85 லட்சம் லிட்டர் குடிநீர் தினமும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மீதமுள்ள 15 வார்டுகளுக்கு, உள்ளூர் நீராதாரங்களான பொது கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வாயிலாக, 68.20 லட்சம் லிட்டர் குடிநீர் தெரு குழாய்கள் வாயிலாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, நகராட்சி நிர்வாகம் சார்பில் வீடுகளுக்கு வழங்கும் குடிநீரை, வசதி படைத்தோர் மற்றும் அதிக வீடுகள் கட்டி வாடகைக்கு விடுவோர், தெரு குழாய்களில் இணைப்பு ஏற்படுத்தி, வீட்டில் தனியாக மின் மோட்டார் வைத்து, தொட்டியில் தண்ணீரை சேகரித்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் கலிவந்தபட்டு, திருக்கச்சூர், என்.ஹெச் -- 1, என்.ஹெச்- - 3, என்.ஹெச் - 3 உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், முறையாக தண்ணீர் கிடைக்காமல் குடியிருப்புவாசிகள் அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:
தெரு குழாய்களில் பிளாஸ்டிக் 'பைப்' பொருத்தி தண்ணீர் பிடிக்க அனுமதி இல்லை. குடம் வாயிலாக மட்டுமே தண்ணீர் பிடிக்க வேண்டும்.
தற்போது வசதி படைத்தவர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு உடையவர்கள் மின் மோட்டார் அமைத்து, வீட்டில் தொட்டி கட்டி தண்ணீரை சேமித்து கொள்கின்றனர்.
தண்ணீர் வரும் காலை மற்றும் மாலை நேரத்தில் இதுபோன்று மோட்டார் வைத்து பிடிப்பதால், மேடான பகுதியில் உள்ளோருக்கு முறையாக தண்ணீர் வழங்கப்படுவது இல்லை.
இதுபோன்று சேமிக்கும் தண்ணீரில் வீட்டில் தோட்டம் அமைப்பது, கார், டூவீலர்களை சுத்தம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக அடிக்கடி சண்டை ஏற்படுவதுடன், குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தோர் மீது, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அபாராதம் விதிப்பது, பிளாஸ்டிக் குழாய்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது ஓட்டு அரசியலை கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் உள்ளது.
இதனால், தெரு குழாய் தண்ணீரை மட்டும் நம்பி உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.