/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் குடிநீர், மின்தடையால் அவதி
/
திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் குடிநீர், மின்தடையால் அவதி
திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் குடிநீர், மின்தடையால் அவதி
திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் குடிநீர், மின்தடையால் அவதி
ADDED : டிச 03, 2024 04:38 AM

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில், மூன்று நாட்களாக மின்சாரம், குடிநீர் வினியோகம் தடைபட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில், 54 ஊராட்சிகள் மற்றும் திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் ஆகிய பேரூராட்சிகள் உள்ளன.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, பின்னர் 'பெஞ்சல்' புயலாக மாறியது.
கடந்த 30ம் தேதி இரவு, புயல் கரையை கடந்தது. சூறாவளி காற்றால் மின்கம்பம் சாய்வது, மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவது உள்ளிட்ட பாதிப்புகளை தவிர்க்க, அனைத்து பகுதிகளிலும், அன்று காலையே மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
புயல் காற்றில் பல இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து, மின்கம்பிகள் அறுந்து சேதமடைந்து உள்ளன.
மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிப் பகுதிகள் தவிர்த்து, ஊராட்சிப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக, மின் வினியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறையால் மின்தடையை சரி செய்வது தாமதமாகி, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி நிர்வாகம், ஜெனரேட்டர் பயன்படுத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காமல், அலட்சியமாக உள்ளது. பெரும்பாலான ஊராட்சிகளில், குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது.
திருக்கழுக்குன்றம் அடுத்த, பொன்பதிர்கூடம் ஊராட்சிப் பகுதியினர், மூன்று நாட்களாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக தெரிவித்தனர்.
புல்லேரி ஊராட்சி, கீரப்பாக்கம் பகுதியினர் குடிநீர் வழங்க கோரி, நேற்று அப்பகுதி செங்கல்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். புதுப்பட்டினம் ஊராட்சியின் பெரும்பாலான பகுதிகளில், நேற்று வரை மின்சாரம் வினியோகிக்காததை கண்டித்து, பழைய கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் செய்ய முயன்றனர்.
திருப்போரூர்
'பெஞ்சல்' புயல் காரணமாக, திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால் 100க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.
தொடர்ந்து, மின் தடை செய்யப்பட்டது. 30ம் தேதி தொடர்ந்து புயல் மழை பெய்ததால், சீரமைப்பு பணி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இரவு புயல் கரையை கடந்து மழை, புயல் ஓய்ந்தது.
நேற்று முன்தினம் முதல் மின்வாரியத்தினர், மின் பாதைகளில் சீரமைப்பு பணி மேற்கொண்டு, படிப்படியாக மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.
இதில் பூண்டி, ராயமங்கலம், எடர்குன்றம், கரும்பாக்கம், பூயிலுப்பை உள்ளிட்ட பல கிராமங்களில், நேற்று பிற்பகல் வரை மின்சாரம் இல்லை.
இதனால், மின்மோட்டார் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்வது தடைபட்டுள்ளது. இரவு நேரத்தில் மின்தடையால், கொசுத் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.