/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆறே மாதங்களில் மூன்று கமிஷனர்கள் மாமல்லையில் நிர்வாக பணிகள் முடக்கம்
/
ஆறே மாதங்களில் மூன்று கமிஷனர்கள் மாமல்லையில் நிர்வாக பணிகள் முடக்கம்
ஆறே மாதங்களில் மூன்று கமிஷனர்கள் மாமல்லையில் நிர்வாக பணிகள் முடக்கம்
ஆறே மாதங்களில் மூன்று கமிஷனர்கள் மாமல்லையில் நிர்வாக பணிகள் முடக்கம்
ADDED : அக் 06, 2025 11:39 PM
மாமல்லபுரம் மாமல்லபுரம் நகராட்சிக்கு ஆறே மாதங்களில், மூன்று பேர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளதால், நிர்வாக பணிகள் முடங்குவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல்லவர் கால சிற்பங்கள் அமைந்துள்ள மாமல்லபுரம், சர்வதேச முக்கியத்துவ சுற்றுலா இடமாக விளங்குகிறது. உள்நாடு, சர்வதேச பயணியர், இங்குள்ள சிற்பங்களை கண்டு ரசிக்கின்றனர்.
சிறப்பு வாய்ந்த இவ்வூரை, சுற்றுச்சூழல் துாய்மை உள்ளிட்ட வகைகளில், முறையாக பராமரிக்க வேண்டும்.
சிறப்பு நிலை பேரூராட்சியாக செயல்பட்ட இவ்வூர், சுற்றுலா சிறப்பு கருதி, கடந்த பிப்ரவரியில், இரண்டாம் நிலை நகராட்சி பகுதியாக தரம் உயர்த்தப்பட்டது.
இதையடுத்து, முந்தைய செயல் அலுவலர், பிற ஊழியர்கள், பிற பேரூராட்சி பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர்.
நகராட்சி நிர்வாகத்திற்கு முதல் கமிஷனராக சுவிதாஸ்ரீ என்பவர், கடந்த பிப்ரவரியில் நியமிக்கப்பட்டு, மார்ச் மாதம் பொறுப்பேற்றார்.
நகராட்சியை நிர்வகிக்கும் முக்கிய அதிகாரியான கமிஷனர், இப்பகுதி முக்கியத்துவம், நிர்வாக செயல்பாடு குறித்து அறிந்து கொள்ளவே பல மாதங்களாகும். ஆனால், நகராட்சி நிர்வாக துறையோ, ஒரே மாதத்தில் அவரை மாற்றியது.
அடுத்த கமிஷனராக நியமிக்கப்பட்ட கவின்மொழி, ஐ.பி.எஸ்., தேர்வில் தேர்வாகி பயிற்சிக்குச் சென்றார்.
இதையடுத்து, மதுராந்தகம் நகராட்சி கமிஷனர் அபர்ணா, கடந்த மாதம் முதல், கூடுதல் பொறுப்பில் இங்கும் நிர்வகிக்கிறார்.
அடுத்து, வேறு கமிஷனர் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
மேலும், சுகாதார ஆய்வாளர் நியமிக்கப்படாமல், மறைமலை நகர் சுகாதார ஆய்வாளரே, இங்கும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், கமிஷனராக நியமிக்கப்படுவோர், சில மாதங்களே பணியாற்றி மாற்றப்படும் சூழலில், நிர்வாக பணிகள் முடங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாமல்லபுரத்தில் சாலைகளில் குப்பை, பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி தேங்குதல் என, சீர்கேடுகள் அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மாமல்லபுரம் பேரூராட்சியாக இருந்த போதாவது, நிர்வாகம் நன்றாக செயல்பட்டது. நகராட்சியாக மாறிய பிறகு, நிர்வாகம் மோசமாக உள்ளது. முக்கிய சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்குகிறது.
நிர்வாகத்தினரிடம் தெரிவித்தால், நடவடிக்கை எடுப்பதில்லை. நகராட்சி கமிஷனரை அடிக்கடி மாற்றாமல், இரண்டு ஆண்டுகளுக்காவது பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.