/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகத்தில் கோர கார் விபத்து மூவர் பலி; -இருவர் படுகாயம்
/
மதுராந்தகத்தில் கோர கார் விபத்து மூவர் பலி; -இருவர் படுகாயம்
மதுராந்தகத்தில் கோர கார் விபத்து மூவர் பலி; -இருவர் படுகாயம்
மதுராந்தகத்தில் கோர கார் விபத்து மூவர் பலி; -இருவர் படுகாயம்
ADDED : டிச 27, 2024 02:17 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த படாளம் பகுதியில் நடந்த சாலை விபத்தில், மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சென்னை, நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி,35. இவரது மனைவி சரண்யா, 30.
சரண்யாவின் சகோதரி ஜெயா, 36, இவரது மகள் ஹேமா, 13, மகன் பாலா, 10.
நேற்று இவர்கள், மாருதி சுசுகி ஆல்டோ காரில், சென்னையில் இருந்து சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம், வீரசிக்கம்பட்டி கிராமத்திற்கு கிளம்பினர்.
காரை, கணபதி ஓட்டியுள்ளார்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், புக்கத்துறை அடுத்த படாளம் அருகே தபால்மேடு பகுதியில் சென்ற போது, எதிர் திசையில் திண்டிவனத்தில் இருந்து சென்னை சென்ற மகேந்திரா ஸ்கார்பியோ கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
அந்த கார் நிலைதடுமாறி, சாலையின் மையத்தடுப்பை தாண்டி, கணபதியின் கார் மீது வேகமாக மோதி உள்ளது.
இதில் கணபதி, 35, ஹேமா,13, பாலா, 10, ஆகியோர், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த படாளம் போலீசார், விபத்தில் படுகாயமடைந்த சரண்யா, ஜெயா ஆகியோரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான மகேந்திரா ஸ்கார்பியோ கார் ஓட்டுனர் மற்றும் உடன் பயணித்த நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த கோர விபத்தால், திண்டிவனம் மார்க்கத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.