/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேடந்தாங்கலில் பறவைகள் முகாம் சுற்றுலா பயணியர் கண்டு ரசிப்பு
/
வேடந்தாங்கலில் பறவைகள் முகாம் சுற்றுலா பயணியர் கண்டு ரசிப்பு
வேடந்தாங்கலில் பறவைகள் முகாம் சுற்றுலா பயணியர் கண்டு ரசிப்பு
வேடந்தாங்கலில் பறவைகள் முகாம் சுற்றுலா பயணியர் கண்டு ரசிப்பு
ADDED : மார் 19, 2025 06:16 PM
மதுராந்தகம்:வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ள வெளிநாட்டு பறவைகள், முட்டையிட்டு குஞ்சு பொரித்து, அவற்றை பாதுகாத்து வருவதை, சுற்றுலாப் பயணியர் கண்டு ரசித்து வருகின்றனர்.
மதுராந்தகம் அருகே, உலக புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
இந்த ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக, 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு கொண்ட ஏரி முழு கொள்ளளவு நிரம்பியது. தற்போது, 10 அடி தண்ணீர் உள்ளது.
* வெளிநாட்டு பறவைகள் முகாம்
தற்போது வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு கரண்டி வாயன், நத்தை குத்தி நாரை, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான் மற்றும் வக்கா, புள்ளி மூக்கு வாத்து, வர்ண நாரை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்தன.
மொத்தம், 40,000க்கும் அதிகமான பறவைகள் வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்து வந்தன.
சரணாலயத்திற்கு செப்டம்பர், நவம்பர் மாதங்களில் வந்து சேர்ந்த பறவைகள் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, குஞ்சுகளுடன் தாய்நாட்டிற்கு சென்ற வண்ணம் உள்ளன.
தற்போது, 20,000 பறவைகள் வரை உள்ளன.
* பாதுகாப்பில் கவனம்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகள் வரத்து உள்ளதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது, ஏரியில் வளர்ந்துள்ள நீர் கடம்ப மரங்களை சுற்றி, தண்ணீர் சூழ்ந்துள்ள அமைப்பு.
இதனால் பாம்பு, உடும்பு போன்ற ஊர்வன விலங்குகளின் பேராபத்திலிருந்து பாதுகாப்பாக உணர்கின்றன.
இதனால் பறவைகள், தங்களின் உடல் எடைகளுக்கு ஏற்ப மரக்கிளைகளை கவனமுடன் தேர்ந்தெடுக்கும். முட்டையிடும் காலங்களில், ஏரியில் கிடைக்கும் சிறு குச்சிகள், மரக்கிளை, பட்டை, தழை போன்றவற்றை கொண்டு, சிறிய அளவில் கூட்டை அமைக்கின்றன.
பின், முட்டையிட்டு அடை காத்து, குஞ்சு பொரித்து வளர்க்கின்றன.
சிறிய பறவைகள் வளரும் காலங்களில், மீண்டும் கூட்டை அகலப்படுத்துகின்றன.
குஞ்சு பொரித்த நாள் முதல், அவை வளர்ந்து பறக்கும் தன்மையை அடையும் வரை, கூட்டில் இருந்து கீழே விழாதவாறு, ஆண் மற்றும் பெண் பறவைகள், மிகவும் கவனமுடன் பாதுகாப்பாக வளர்த்து வருகின்றன.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை பார்வையிட வரும் சுற்றுலா பயணியர் மற்றும் கல்வி சுற்றுலா வரும் பள்ளி, கல்லுாரி, மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள், இக்காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.