/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒத்திவாக்கம் மேம்பால இணைப்பு பணியால் போக்குவரத்து மாற்றம்
/
ஒத்திவாக்கம் மேம்பால இணைப்பு பணியால் போக்குவரத்து மாற்றம்
ஒத்திவாக்கம் மேம்பால இணைப்பு பணியால் போக்குவரத்து மாற்றம்
ஒத்திவாக்கம் மேம்பால இணைப்பு பணியால் போக்குவரத்து மாற்றம்
ADDED : பிப் 05, 2025 01:51 AM

செங்கல்பட்டு,ஒத்திவாக்கம் - பொன்விளைந்த களத்துார் இடையே, ரயில்வே கடவுப்பாதையில் மேம்பாலம் கட்டும் பணியில், தற்போது பாலம் இணைக்கும் பணிக்காக, வரும் 12ம் தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்கு, போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம் - பொன்விளைந்தகளத்துார் இடையே ரயில்வே கடவுப்பாதை உள்ளது.
பொன்விளைந்தகளத்துார், ஒத்திவாக்கம், ஆனுார், வல்லிபுரம், பூதுார் என, 25க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அத்தியாவசிய தேவை, அரசு அலுவலகங்கள் மற்றும் வெளியிடங்களுக்கு, அரசு பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களில் இவ்வழியாக செல்கின்றனர்.
அப்போது, கடவுப்பாதையை கடந்து தான் செல்ல வேண்டும். ரயில் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், அடிக்கடி கடவுப்பாதை மூடப்படுகிறது.
இதனால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, மேம்பாலம் கட்டித்தர வேண்டுமென மத்திய, மாநில அரசுகளிடம், கிராமவாசிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.
ரயில்வே துறையினர், கடவுப்பாதை வழியாக கடந்து செல்லும் வாகனங்களை கணக்கெடுப்பு நடத்தியதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்வழியாக செல்வதை உறுதிப்படுத்தினர்.
இப்பகுதியில், ரயில்வே மேம்பாலம் கட்டலாம் என, உயர் அதிகாரிகளுக்கு ரயில்வே துறையினர் பரிந்துரை செய்தனர்.
இதைத்தொடந்து, செங்கல்பட்டு - ஒத்திவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே 2011-12ம் ஆண்டு, 30.40 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன், தண்டவாளப் பகுதியில் மேம்பாலப் பணியை, ரயில்வே நிர்வாகம்முடித்தது.
ஆனால், நெடுஞ்சாலைத் துறையினர் மேம்பாலப் பணியை துவக்காமல் கிடப்பில் போட்டனர். இதுகுறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, 2018ம் ஆண்டு, 33.24 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசு தொழில்நுட்ப அனுமதி வழங்கியது. இப்பணிக்கு, 2022ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதே ஆண்டு, ஆகஸ்ட் மாதம் மேம்பாலப் பணிக்கு 26.58 கோடி ரூபாய்க்கு 'டெண்டர்' விடப்பட்டது. இப்பணியை மேற்கொள்ள, ஈரோடு 'மயான்ஸ் இன்பிராஸ்டரக்சர்' நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த 2023 ம் ஆண்டு, மார்ச் 12ம் தேதி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், துவக்கி வைத்தார். ரயில்வே கடவுப்பாதையில் இருந்து, திருக்கழுக்குன்றம் சாலையில், மேம்பாலப் பணி கட்டும் பணி நிறைவுபெறும் நிலையில் உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஒத்திவாக்கம் பகுதியில் பணிகள் துவங்கி, நடைபெற்று வருகின்றன.
அத்துடன், ரயில்வே கடவுப்பாதையில் மேம்பாலத்துடன் பாலத்தை இணைக்கும் பணிக்கு, நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் பிரிவுக்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.ரயில்வே கடவுப்பாதை மேம்பாலத்துடன், பாலத்தை இணைக்கும் பணி நடைபெற உள்ளதால், ஒத்திவாக்கம் ரயில்வே கடவுப்பாதையை மூட, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
தற்போது, மேம்பாலப் பணிகள் நடைபெற உள்ளதால், மூன்று மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, நெடுஞ்சாலைத்துறை கட்டுமான பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஒத்திவாக்கம் - பொன்விளைந்த களத்துார் ரயில்வே மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது. ரயில்வே கடவுப்பாதை மேம்பாலத்துடன், பாலத்தை இணைக்கும் பணி துவக்கப்பட உள்ளதால், வரும் 12ம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு, போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. பணிகளை விரைவில் முடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- வி.பி.நாராயணன்,
கோட்ட பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள், செங்கல்பட்டு.