/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.43 கோடியில் சமூக மேம்பாட்டிற்கான பயிற்சி மையம் செங்கையில் அனைத்து துறை அதிகாரிகளுக்கு பயிற்சி
/
ரூ.43 கோடியில் சமூக மேம்பாட்டிற்கான பயிற்சி மையம் செங்கையில் அனைத்து துறை அதிகாரிகளுக்கு பயிற்சி
ரூ.43 கோடியில் சமூக மேம்பாட்டிற்கான பயிற்சி மையம் செங்கையில் அனைத்து துறை அதிகாரிகளுக்கு பயிற்சி
ரூ.43 கோடியில் சமூக மேம்பாட்டிற்கான பயிற்சி மையம் செங்கையில் அனைத்து துறை அதிகாரிகளுக்கு பயிற்சி
ADDED : டிச 13, 2024 02:06 AM

செங்கல்பட்டு:ஆத்துாரில், சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையம் மற்றும் அரசு பாதுகாப்பு இல்லம் அமைக்கும் பணி, 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தில், சமூக நலத்தறையின் கீழ், அரசினர் பிற்காப்பு நிறுவனம், கடந்த 1961ல் துவக்கப்பட்டது. இந்நிறுவனம், 22.74 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கி, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
சென்னை, வேலுார், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், சமூக நலத்துறையின் கீழ், அரசினர் பாதுகாப்பு இல்லங்கள் உள்ளன.
இந்த இல்லங்களில், குற்ற செயல்களில் ஈடுபடும் சிறார் மற்றும் தண்டனை பெற்ற சிறார்கள் அடைக்கப்படுகின்றனர்.
இங்கு அவர்களுக்கு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தற்போது, அரசினர் பாதுகாப்பு இல்லங்களில், இட நெருக்கடி உள்ளதாக தெரிகிறது. ஒரு சில இல்லங்களில் இருந்து, தண்டனை பெற்ற சிறார்கள், தப்பி ஓடுகின்றனர்.
இவர்களை நல்வழிப்படுத்தி, சமூகத்துடன் வாழும் சூழ்நிலைக்கேற்ப படிப்பு, உடற்பயிற்சி, விளையாட்டு, தொழில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென, தமிழக அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.
இதைத்தொடர்ந்து, மாநிலத்திலேயே முதல் முறையாக, சமூக நலத்துறையின் கீழ், ஆத்துார் அரசினர் பிற்காப்பு நிறுவன இடத்தில் அரசு பாதுகாப்பு இல்லம் கட்ட, 15 கோடியே 95 லட்சம் ரூபாய், சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையம் கட்ட, 27 கோடி ரூபாய் என, 42.95 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது.
இப்பணிக்கு 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரங்கள் கடந்தாண்டு பணிகளை துவக்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது.
* பயிற்சி மையம்
ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டு பயிற்சி மையத்தில் பெண்கள், குழந்தைகளின் நலன், உரிமைகள், மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல் குறித்து, சமூக நலத்துறை உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி, திறன் மேம்பாடு ஆராய்ச்சி போன்றவை நடைபெறும். இந்த மையத்தில், மாநிலம் முழுதும் உள்ள அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி மையத்தில் நிர்வாக அலுவலகம், பயிற்சி மையம், டிஜிட்டல் நுாலகம், வகுப்பறை, மாநாட்டு அரங்கம், ஆசிரியர் அறை, விடுதி கட்டடம், உடற்பயிற்சிக்கூடம், உணவு விடுதி ஆகியவற்றுக்கு தனித்தனியாக கட்டடங்கள் உள்ளன.
* அரசு பாதுகாப்பு இல்லம்
அரசு பாகாப்பு இல்லம், 16 வயதிலிருந்து 18 வயதிற்குள் சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருத்தப்படும் குழந்தைகள், 18 வயதை கடந்தவர்களை தங்க வைக்க அமைக்கப்படுகிறது.
இந்த இல்லத்தில், சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகளை நல்வழிப்படுத்த முறைசாரக் கல்வி, தொழிற்பயிற்சி, தீவிர ஆற்றுப்படுத்துதல், ஒழுக்கம் சார்ந்த வகுப்புகள், வாழ்க்கை திறன் பயிற்சிகள் போன்ற சேவைகளும் வழங்கப்படும்.
சமூகத்தில் பயனுள்ள குடிமக்களாக இவர்களை உருவாக்க, செங்கல்பட்டு மாவட்டத்தில், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் 100 குழந்தைகள் தங்கும் வசதியுடன் கட்டப்படுகிறது.
சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையம் மற்றும் அரசு பாதுகாப்பு இல்லம் கட்டுமான பணிகள், கடந்தாண்டு துவங்கி, நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடித்து, சமூக நலத்துறையிடம் இம்மாதம் இறுதிக்குள் ஒப்படைக்கப்படும்.