/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆட்டோ கட்டணம் மறுசீரமைப்பு போக்குவரத்து ஆணையர் உறுதி
/
ஆட்டோ கட்டணம் மறுசீரமைப்பு போக்குவரத்து ஆணையர் உறுதி
ஆட்டோ கட்டணம் மறுசீரமைப்பு போக்குவரத்து ஆணையர் உறுதி
ஆட்டோ கட்டணம் மறுசீரமைப்பு போக்குவரத்து ஆணையர் உறுதி
ADDED : ஜன 30, 2024 06:35 AM
சென்னை : ''ஆட்டோ கட்டணம் மறுசீரமைப்பு தமிழக அரசின் பரிசீலனையில் இருக்கிறது,'' என, போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில், ஓ.என்.டி.சி., எனப்படும் டிஜிட்டல் வர்த்தகத்தின் திறந்த நெட்வொர்க்கின் ஒரு பகுதியான 'நம்ம யாத்ரி' ஆட்டோ புக்கிங் செயலியை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முக சுந்தரம் அறிமுகம் செய்தார்.
இதில் இணைந்த ஆட்டோக்களை கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இந்த செயலியில் ஏற்கனவே, 12,000 ஓட்டுனர்கள் இணைந்துள்ளனர். அடுத்த ஆறு மாதங்களில் ஒரு லட்சம் ஓட்டுனர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் பேசியதாவது:
எந்த தொழில்நுட்பமும் மக்களுக்கு பயன்பட வேண்டும். சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய சவாலாக உள்ளதால், தற்போது சி.எம்.டி.ஏ.,வின் எல்லை வரையறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் தாலுகா வரை, சி.எம்.டி.ஏ., தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் அனுமதி பெற்ற ஆட்டோக்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குள் சென்று வர முடியும். அரசு, 2013ம் ஆண்டு நிர்ணயித்த ஆட்டோ கட்டணம் தற்போது வரை மாறவில்லை. எனவே, ஆட்டோ கட்டண மறுசீரமைப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் சிறப்பு அதிகாரி ஜெயக்குமார், ''சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் சார்பில் புதிய செயலி அடுத்த ஒன்பது மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும்.
''அப்போது பேருந்து, ரயில்களில் பயணிக்க ஒருங்கிணைந்த டிக்கெட் வசதி பெறமுடியும். இதில், நம்ம யாத்ரி போன்ற செயலியை இணைக்க முடியும்,'' என்றார்.
இதில், ஓ.என்.டி.சி.,யின் நிர்வாக இயக்குனர் கோஷி, 'ஜஸ்பே' தலைமை செயல் அதிகாரி விமல்குமார் உட்பட பலர் பங்கேற்று பேசினர்.