ADDED : டிச 17, 2024 12:29 AM

மறைமலை நகர்,செங்கை புறநகர் பகுதியில் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை, செங்கை - காஞ்சிபுரம் சாலை, சிங்கபெருமாள் கோவில் - - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளன.
இந்த சாலையை சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான டாரஸ் லாரிகள் எம் - சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருள்கள் ஏற்றிச் செல்கின்றன.
மேலும் இந்த பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் இடங்களில் செம்மண் எடுக்கப்பட்டு லாரிகள் வாயிலாக மற்ற இடங்களில் கொட்டப்படுகின்றன.
லாரிகளில் எடுத்துச்செல்லப்படும் ஜல்லி லோடுகள் தார்ப்பாய் மூடாமல் எடுத்துச் செல்லப்படுகின்றன. மணல் துகள்கள் காற்றில் பறந்து, பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது விழுகின்றன.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
டாரஸ் லாரிகளில் அதிக பாரத்துடன் தார்ப்பாய் மூடாமல் செல்வதால் மற்ற வாகன ஓட்டிகளின் கண்களில் விழும் மணல் துகள்களால், விபத்து அபாயம் உள்ளது.
வேகத்தடைகளில் லாரிகள், ஏறி இறங்கும் போது சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
மேலும் இந்த லாரிகள் உள்ள 'ஹாரன்' சத்தங்கள் அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்புவதால் கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகள் மற்றும் விதிமீறல் வாகனங்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

