/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு: இருவர் கைது
/
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு: இருவர் கைது
ADDED : டிச 03, 2024 08:07 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தையூர் கிராமத்தில் வசிப்பவர் நாஞ்சில்குமார், 30. தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி தேவகிருபை, பிரசவத்திற்காக பெருங்களத்துாரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றிருந்தார்.
கடந்த 23ம் தேதி, நாஞ்சில்குமார் வீட்டை பூட்டி விட்டு வெளியில் மின்விளக்கை எரிய வைத்துவிட்டு, மனைவியை பார்க்க பெருங்களத்துாருக்கு சென்றார்.
மறுநாள் காலை 11:30 மணிக்கு, நாஞ்சில்குமார் வீடு திரும்பினார். அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, 8 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் பணம் மற்றும் வீட்டில் இருந்த 'டிவி' மூன்று மொபைல் போன்கள் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து, கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், கொளத்துார் பகுதியை தனசேகர், 40, வாலாஜாபாத் அடுத்த வெங்குடி பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார், 19, ஆகியோர் திருடியது தெரியவந்தது.
இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 5 சவரன் தங்க நகைகள், மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.