/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியார் பள்ளி ஆசிரியையிடம் செயின் பறித்த இருவர் கைது
/
தனியார் பள்ளி ஆசிரியையிடம் செயின் பறித்த இருவர் கைது
தனியார் பள்ளி ஆசிரியையிடம் செயின் பறித்த இருவர் கைது
தனியார் பள்ளி ஆசிரியையிடம் செயின் பறித்த இருவர் கைது
ADDED : அக் 03, 2024 02:01 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த படூர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சகிலா, 32. படூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிகிறார். இவரது மகள், மகனும், அதே பள்ளியில் படிக்கின்றனர்.
கடந்த 27ம் தேதி மாலை, சகிலா பள்ளி முடிந்து, இரண்டு பிள்ளைகளையும் வீட்டிற்கு அழைத்து சென்றார். அப்போது, பள்ளி அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், பைக்கில் வந்து சகிலாவை மிரட்டி, 8 சவரன் தங்க செயினை பறித்து தப்பினர்.
இதையடுத்து, சகிலா தாம்பரம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில், கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
மேலும், இரண்டு தனிப்படை அமைத்து, மர்மநபர்களை தேடி வந்தனர்.
நேற்று காலை, கேளம்பாக்கம் - -வண்டலுார் சாலை, புதுப்பாக்கம் ஆஞ்சேநயர் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பைக்கில் வந்த இரண்டு வாலிபர்களை மடக்கி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். உடனே, அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில், பெங்களூரை சேர்ந்த ஜெய்சன் மேத்யூ, 30, மணிகண்டா, 30, என்பதும், இவர்கள் தனியார் பள்ளி ஆசிரியை சகிலாவிடம் செயின் பறித்ததும் தெரியவந்தது.
மேலும், இந்த நபர்கள் பெங்களூருவிலிருந்து மது வாங்கி வந்து, சென்னையில் தங்கி, ஆங்காங்கே உள்ள மதுக்கூடங்களில் குடிப்பதும், ஜாலியாக செலவு செய்துவிட்டு, மீண்டும் பெங்களூரு செல்வதை வழக்கமாக கொண்டிப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்த 7 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.