/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல்லை வாலிபர் கொலை வழக்கில் இருவர் கைது; ஒருவர் கோர்ட்டில் சரண்
/
நெல்லை வாலிபர் கொலை வழக்கில் இருவர் கைது; ஒருவர் கோர்ட்டில் சரண்
நெல்லை வாலிபர் கொலை வழக்கில் இருவர் கைது; ஒருவர் கோர்ட்டில் சரண்
நெல்லை வாலிபர் கொலை வழக்கில் இருவர் கைது; ஒருவர் கோர்ட்டில் சரண்
ADDED : செப் 25, 2025 01:16 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவிலில் நெல்லை வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரதி கண்ணன், 26. இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், சிங்கபெருமாள் கோவில் அடுத்த பெரிய விஞ்சியம்பாக்கம் பகுதியில் தங்கி, உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார்.
இவருடன், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜன், 27, உள்ளிட்ட நால்வர் தங்கியிருந்தனர். கடந்த 22ம் தேதி அதிகாலை, 3:40 மணியளவில் பாரதி கண்ணனும், ராஜனும் வீட்டின் வரவேற்பு அறையில் துாங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், பாரதி கண்ணன் மற்றும் ராஜனை பீர் பாட்டில் மற்றும் கத்தியால் தாக்கியதில் பாரதி கண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த ராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
இறந்த பாரதி கண்ணனுடன் தங்கியிருந்த ராஜன் உள்ளிட்ட நால்வர் மற்றும் தென்காசியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், 26, இவரது நண்பர்களான தென்காசியைச் சேர்ந்த பூபதி,22, ராஜராஜன், 19, உள்ளிட்டோர், சில மாதங்களுக்கு முன், பாரதி கண்ணன் அறையில் தங்கியிருந்த போது, அனைவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
இதே அறையில் 20 நாட்களுக்கு முன் பாரதி கண்ணன் மற்றும் நண்பர்களும், பாலகிருஷ்ணன் தரப்பும் மது அருந்தி உள்ளனர்.
அப்போது ஏற்பட்ட சண்டையில், பாரதி கண்ணனின் நண்பர்கள் பாலகிருஷ்ணனை தாக்கி அனுப்பி உள்ளனர்.
இதில் கோபமடைந்த பாலகிருஷ்ணன், கடந்த 22ம் தேதி அதிகாலை தன் நண்பர்களான பூபதி மற்றும் ராஜராஜன் ஆகியோருடன் சேர்ந்து வீட்டிற்குள் புகுந்து, பாரதி கண்ணனை அடித்துக் கொன்றுள்ளனர்.
நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் மதுரையில், நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த பூபதி மற்றும் ராஜராஜனை, மறைமலை நகர் போலீசார் நேற்று கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பாலகிருஷ்ணனை நீதிமன்ற காவலுக்கு எடுத்து விசாரணை நடத்திய பின்னரே, முழுமையான காரணம் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.