/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்சாரம் பாய்ந்து காட்டூரில் இருவர் பலி
/
மின்சாரம் பாய்ந்து காட்டூரில் இருவர் பலி
ADDED : டிச 12, 2024 11:19 PM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், வெண்பேடு ஊராட்சிக்கு உட்பட்டது காட்டூர் கிராமம். நேற்று, இந்த கிராமத்திலுள்ள விவசாய நிலங்களுக்கு சென்ற விவசாயிகள், நெல்வயலில் காயங்களுடன் இரண்டு சடலங்கள் கிடப்பதைப் பார்த்துள்ளனர்.
இதுகுறித்த தகவலின்படி, காயார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது, 25 வயது மதிக்கத்தக்க இரு வாலிபர்கள் கை, கால்களில் காயங்களுடன், மின்சாரம் பாய்ந்து இறந்திருப்பது தெரிந்தது.
உடனே, மின்சார வாரியத்திற்கு தகவல் அளித்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சம்பவம் நடந்த விவசாய நிலத்தில் எலி, பன்றிகளை கட்டுப்படுத்த, மின்விளக்குடன் மின்சார வேலி அமைக்கப்பட்டு இருந்தது.
சடலங்கள் அருகே, மின் கம்பிகளை துண்டிக்கும், 'கட்டிங் மிஷின்' போன்ற உபகரணங்கள் இருந்தன. ஒருவேளை இவர்கள், இரவு நேரத்தில் மின் கம்பி, மின்மோட்டார் திருடும் கும்பலாக இருக்கலாம்.
அவ்வாறு திருட வந்த போது, வயலில் எலிக்காக வைத்த மின்சார வேலியில் சிக்கி இறந்திருக்கலாம். அல்லது மின் மோட்டாரை திருடும்போது, அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என்ற கோணங்களில், போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுதொடர்பாக, வெண்பேடு கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் பெற்று, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இரு சடலங்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இறந்த இருவரின் மொபைல்போன்களை கைப்பற்றி, அதிலுள்ள தரவுகளை வைத்து விசாரித்ததில், இவர்கள் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ்,20, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தகுமார், 24, என தெரிந்தது.
இருவரும், பையனுார் பகுதியில் வசித்துள்ளனர்.
கடந்த இரு நாட்களுக்கு முன் தண்டலம் ஊராட்சியில், விவசாய நிலத்திலுள்ள 'பம்ப் செட்'டுகளில் இருந்த 7 மின்மோட்டார்களை உடைத்து, செப்பு கம்பிகள் திருடப்பட்டன.
இந்த திருட்டு சம்பவத்தில், இறந்த இருவரும் தொடர்புடையவர்களாக எனவும், போலீசார் விசாரிக்கின்றனர்.