/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடற்கரையில் மீன் திருடிய பெண் உட்பட இருவர் கைது
/
கடற்கரையில் மீன் திருடிய பெண் உட்பட இருவர் கைது
ADDED : அக் 08, 2024 01:36 AM
திருப்போரூர், திருப்போரூர் அடுத்த கோவளம் பகுதி மீனவர்கள், தினசரி படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
கடலுக்கு செல்வோர் நள்ளிரவில் கரைக்கு வருவதால், படகுகளை கடற்கரையில் நிறுத்தி வைத்து, அங்கு இருக்கும் தெர்மாகோல் பெட்டிகளில் மீன்களை வைத்துவிட்டு வீடுகளுக்கு சென்று விடுவர்.
காலையில் வந்து இந்த மீன்களை எடுத்து வியாபாரம் செய்வர்.
இதை அறிந்த மர்ம நபர்கள், சில நாட்களாக கடற்கரையில் பெட்டியில் வைக்கப்படும் மீன்களை நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் சென்று திருடி வந்துள்ளனர்.
தொடர்ச்சியாக மீன் திருடு போவதை அறிந்த மீனவர்கள், கடற்கரை பகுதியில் பொருத்தப்பட்ட 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர்கள் பைக்கில் வந்து, மீன்களை திருடி எடுத்துச் செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து, 10க்கும் மேற்பட்ட மீனவர்கள், நேற்று முன்தினம் இரவு மீன் திருடர்களை பிடிக்க, படகுகளில் துாங்குவது போல் படுத்திருந்தனர்.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, ஒரு பெண்ணும், ஆணும் பைக்கில் வந்து, கடற்கரையில் பெட்டியில் வைத்திருந்த மீன்களை திருடினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த மீனவர்கள், அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.
பின், கேளம்பாக்கம் போலீசில் இருவரையும் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அவர்கள் தாம்பரம் பகுதியை சேர்ந்த ஜூலி, 27, நிவேதன், 19, என்பதும், இருவரும் தாம்பரம் மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.