/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டீ கடை ஊழியரை தாக்கிய ரவுடிகள் இருவர் கைது
/
டீ கடை ஊழியரை தாக்கிய ரவுடிகள் இருவர் கைது
ADDED : ஜன 22, 2025 12:16 AM

கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட நெல்லிக்குப்பம் பிரதான சாலையில், டீ கடை நடத்துபவர் இளையராஜா, 45.
நேற்று முன்தினம் இரவு, இவரது கடைக்கு உதயா, 35, என்பவர் மது போதையில் வந்துள்ளார். அப்போது வீண் தகராறு செய்து, இளையராஜாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதை தடுக்க வந்த இளையராஜாவின் மனைவி சாந்தி, 45, என்பவருக்கும் அடி விழுந்துள்ளது.
உடனே இளையராஜா, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த உதயா, தன் நண்பர் பாபு என்பவரை போன் செய்து அழைத்துள்ளார்.
பாபு அங்கு வந்ததும், இருவரும் சேர்ந்து, மீண்டும் இளையராஜாவை தாக்கி உள்ளனர். அந்த நேரத்தில் கூடுவாஞ்சேரி போலீசார் அங்கு வந்த போது, அவர்களையும் சண்டைக்கு அழைத்துள்ளனர்.
போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது தெரிந்தது. புகாரின்படி, இருவரையும் கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்ற சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, இப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், ரவுடிகளால் தொடர்ந்து பிரச்னை வருவதாக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பினர்.