/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இரு வேறு சாலை விபத்து ஒருவர் பலி; 11 பேர் காயம்
/
இரு வேறு சாலை விபத்து ஒருவர் பலி; 11 பேர் காயம்
ADDED : பிப் 13, 2024 04:33 AM
திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த வெண்பேடு கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ், 43. இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, இருசக்கர வாகனத்தில் நெல்லிக்குப்பம் -கொட்டமேடு சாலையில் சென்றார்.
அப்போது, எதிர் திசையில் வந்த மினி வேன், இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த யுவராஜை, அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதேபோல், நேற்று காலை 8:00 மணிக்கு, அச்சிறுவாக்கத்திலிருந்து ஆறு பெண் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு, கன்னிவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேன் சென்றது.
அப்போது, செம்பாக்கம் அருகே வேன் சென்றபோது, எதிர்திசையில் வந்த இரண்டு இருசக்கர வாகனங்களின் மீது மோதி, சாலையோர மரத்தில் மோதி நின்றது.
இதில், வேனில் பயணித்த ஆறு பெண்கள், வேன் ஓட்டுனர், இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் என, 11 பேர் காயமடைந்தனர்.
அனைவரையும் மீட்டு, மூன்று ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.