/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எரியாத மின் விளக்குகள் பாலுார் சாலையில் அச்சம்
/
எரியாத மின் விளக்குகள் பாலுார் சாலையில் அச்சம்
ADDED : மார் 31, 2025 02:19 AM

மறைமலைநகர்,:பாலுார் சாலையில் பல்வேறு இடங்களில் மின் விளக்குகள் எரியாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிங்கபெருமாள் கோவில் - பாலுார் சாலை 13 கி.மீ., துாரம் உடையது.
இந்த சாலையை வெண்பாக்கம், கொளத்துார், ரெட்டிப்பாளையம், பாலுார் உள்ளிட்ட கிராம மக்கள், தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு -காஞ்சிபுரம் சாலையின் இணைப்பு சாலையாக விளங்குவதால், இச்சாலை வழியே சிங்கபெருமாள்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் செல்வோர், பள்ளி வாகனங்கள், தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் என, தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையோரம் உள்ள மின் கம்பங்களில் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவை பெரும்பாலான இடங்களில் பழுதடைந்து எரியாமல் உள்ளதால், இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த நெடுஞ்சாலை வெங்கடாபுரம், கொளத்துார், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் இந்த வழியாக செல்கிறனர். இந்த சாலையில் ஊராட்சிகள் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள விளக்குகளில் போதிய வெளிச்சம் இல்லாமலும், பல இடங்களில் பழுதடைந்து விளக்குகள் எரியாமலும் உள்ளதால், இரவு நேரங்களில் சிரமமாக உள்ளது.
இந்த தடத்தில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பேருந்து உள்ளதால், பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களையே பயன்படுத்தி சென்று வருகின்றனர்.
மேலும், கொளத்துார் டாஸ்மாக் கடைக்கு பல்வேறு பகுதிகளில் வருவோரும் இந்த சாலையில் செல்கின்றனர். மது போதையில் வருவோர், மற்ற வாகனங்களில் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, இந்த சாலையில் அனைத்து பகுதிகளிலும் விளக்குகள் எரியவும், அதே போல அதிக அளவில் வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளை பொருத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.