/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயிலில் மொபைல் போன் திருடிய உ.பி., வாலிபர் கைது
/
ரயிலில் மொபைல் போன் திருடிய உ.பி., வாலிபர் கைது
ADDED : ஜூன் 22, 2025 10:49 PM

மறைமலை நகர்:காஞ்சிபுரம் மாநகராட்சி, அப்பாராவ் தெருவைச் சேர்ந்தவர் திவேஷ், 25. மறைமலை நகரில் தங்கி, பொத்தேரியில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த, 26ம் தேதி இரவு, காஞ்சிபுரத்தில் இருந்து பொத்தேரிக்கு, புறநகர் மின்சார ரயிலில் பயணித்தார்.
இரவு 9:50 மணியளவில், செங்கல்பட்டு அடுத்த பரனுார் ரயில் நிலையத்தில் நின்று, மீண்டும் ரயில் புறப்பட்ட போது, திவேஷிடமிருந்து மர்ம நபர் ஒருவர், 'சாம்சங்' ரக விலை உயர்ந்த மொபைல்போனை பறித்துச் சென்றார்.
அவரைப் பிடிக்க, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த திவேஷ், படுகாயமடைந்தார். உடனே அவரை அங்கிருந்தோர் மீட்டு, பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, செங்கல்பட்டு, பரனுார் ரயில் நிலையங்களை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், மொபைல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர், உத்தரப்பிரதேச மாநிலம், கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் அலி என்பவரது மகன் அமீன் அலி,18, என தெரிந்தது.
இதையடுத்து, செங்கல்பட்டு ரயில்வே காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் உத்தரப்பிரதேசம் சென்று விசாரித்தனர். அதில், அமீன் அலி செங்கல்பட்டு பகுதியில் சுற்றி வருவது தெரிந்தது.
இதையடுத்து, செங்கல்பட்டு புலிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் பதுங்கி இருந்த அமீன் அலியை போலீசார் கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணைக்குப் பின், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.