/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊருக்கு வெளியே 'அர்பன் ஹட்' விற்பனை வளாகம்...நிதி வீணடிப்பு!:தரகர்களை நம்பியிருப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பு
/
ஊருக்கு வெளியே 'அர்பன் ஹட்' விற்பனை வளாகம்...நிதி வீணடிப்பு!:தரகர்களை நம்பியிருப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பு
ஊருக்கு வெளியே 'அர்பன் ஹட்' விற்பனை வளாகம்...நிதி வீணடிப்பு!:தரகர்களை நம்பியிருப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பு
ஊருக்கு வெளியே 'அர்பன் ஹட்' விற்பனை வளாகம்...நிதி வீணடிப்பு!:தரகர்களை நம்பியிருப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பு
ADDED : நவ 27, 2024 12:49 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், பூம்புகார் நிறுவனம் சார்பில், 'அர்பன் ஹட்' எனப்படும் நகர்ப்புற கைவினை பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை வளாகம் அமைந்துள்ளது. இது, ஊருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணியர் வருகையின்றி, 5 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட இவ்வளாகம், ஆறு ஆண்டுகளாக பயனின்றி வீணாகி வருகிறது. அதனால், கைவினைப் பொருள் விற்பனைக்கு தரகர்களையே நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு, கலைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கைவினைக் கலைஞர்கள் நிறைந்துள்ளனர். சிலை வடிப்பது, வண்ண ஓவியம் தீட்டுவது, பிரம்பு, பனையோலை, தேங்காய் சிரட்டை, சணல், சங்கு உள்ளிட்ட இயற்கை பொருட்களில், வீட்டு உபயோக, அலங்கார பொருட்கள் தயாரிப்பது என, பாரம்பரிய கைவினைத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்கள், வாடிக்கையாளர்களையும் கவர்கிறது. சுற்றுலா பகுதிகளில், கைவினைப் பொருட்களை வெளிநாட்டு சுற்றுலா பயணியர் விரும்பி வாங்குகின்றனர்.
ஆனால், கலைஞர்கள் நேரடியாக விற்க இயலாமல், இடைத்தரகர்கள், மொத்த வியாபாரிகள் ஆகியோரிடம், குறைவான விலைக்கே விற்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதனால், அவர்களின் வருவாய் குறைகிறது.
இந்நிலையில், அவர்களின் பொருளாதார மேம்பாடு கருதி, அவரவர் தயாரிக்கும் பொருட்களை, தரகர்களின் தலையீடு இன்றி, நேரடியாக சந்தைப்படுத்தி விற்பதற்காக, மத்திய ஜவுளி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் கைவினைப் பொருட்கள் வளர்ச்சி ஆணையரகம் முடிவெடுத்தது.
இத்திட்டத்தின்கீழ், 'அர்பன் ஹட்' எனப்படும் நகர்ப்புற கண்காட்சி, சந்தைப்படுத்துதல் வளாகம், முதலில் புதுடில்லியில் துவக்கப்பட்டது.
பிற மாநிலங்களிலும், மாநில கைவினைத் தொழில்கள் வளர்ச்சி நிர்வாகத்துடன் இணைந்து, முக்கிய சுற்றுலா பகுதிகளில் துவக்கப்பட்டது. தமிழகத்தில், மாமல்லபுரம் மற்றும் நாகர்கோவில் ஆகிய பகுதிகளில், இத்தகைய வளாகம் அமைக்கப்பட்டது.
மாமல்லபுரத்தில், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி வளாகத்தில், 4.5 ஏக்கர் இடம் குத்தகைக்கு பெற்று, 5 கோடி ரூபாய் மதிப்பில், 40 கடைகளுடன், கடந்த 2018ல் இவ்வளாகம் அமைக்கப்பட்டது.
பாரம்பரிய வடிவில் கட்டப்பட்ட கட்டடத்தில், கடைகள், திறந்தவெளி கலையரங்கம், கைவினைக் கலைஞர்கள் தங்குமிடம் உள்ளிட்டவற்றுடன், இவ்வளாகம் அமைந்துள்ளது.
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின்கீழ் இயங்கும் பூம்புகார் நிறுவனம், கைவினைஞர் அடையாள அட்டை பெற்றவர்களை, பொருட்கள் விற்க தேர்வு செய்யும்.
அவர்களிடம், தலா 15 நாட்கள் கடையை ஒப்படைத்து, தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தி விற்க அனுமதிக்கும். இவ்வாறு, அனைத்து கலைஞர்களுக்கும், சுழற்சி முறையில் கடையை ஒப்படைத்து, கைவினைப் பொருட்கள், கைத்தறி, நெசவு ஆகியவற்றை, ஆண்டு முழுதும் விற்கலாம்.
பிற மாநில கலைஞர்களுக்கும் வாய்ப்பு உண்டு. விற்பனையாளர்களிடம், வளாக பராமரிப்பிற்காக மட்டும் குறிப்பிட்ட தொகை வசூலிக்கவும் முடிவெடுக்கப்பட்டது.
துவக்க ஆண்டில், மாமல்லை கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி நடத்தப்பட்டது. அதன்பின், பெயரளவிற்கு மட்டுமே கடைகள் நடத்தப்பட்டு, நாளடைவில் விற்பனைக்கு வழியின்றி, கலைஞர்கள் கடைகளை புறக்கணித்தனர்.
பல்லவ சிற்பங்கள் உள்ள நகர்ப் பகுதியிலிருந்து, இவ்வளாகம் 2 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. பயணியரை கவர, நுழைவாயிலில் அலங்கார வளைவு, வளாகத்தில் சுதை சிற்பங்கள் என மேம்படுத்தப்பட்டது.
இருப்பினும், இவ்வளாகம் குறித்து, பயணியர் அறிய இயலவில்லை. போதிய விளம்பரமும் இல்லை. அதனால், விற்பனை வாய்ப்பே இன்றி, கடை நடத்த கலைஞர்களும் ஆர்வம் காட்டவில்லை.
அதன்பின், 15 நாட்கள் என்பதற்கு மாற்றாக, ஒரு மாதத்திற்கு, தலா 500 ரூபாய் வாடகைக்கு அளிக்க முடிவெடுக்கப்பட்டது. அப்போதும், கலைஞர்கள் இவ்வளாகத்தை புறக்கணித்து வருகின்றனர்.
அதனால், கடந்த ஆறு ஆண்டுகளாக, இவ்வளாகம் பயனின்றி முடங்கியுள்ளது. நான்கு கடைகளை பூம்புகார் நிறுவன விற்பனையகமும், ஒரு கடையை காதி நிறுவனமும் மட்டுமே, தற்போது நடத்தி வருகின்றன.
பெரும்பாலான கடைகள் செயல்படவில்லை. பூம்புகார் விற்பனையகமும், குறிப்பிடத்தக்க வருவாய் இன்றி, நட்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
இவ்வளாகத்தை, சுற்றுலா பயணியர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பயணியரை கவரும் வகையில் மேம்படுத்தி, அனைத்து கடைகளும் செயல்பட, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என, கைவினைக் கலைஞர்கள் வலியுறுத்துகின்றனர்.
மத்திய அரசு வழங்கும் நிதியை செலவிட, பூம்புகார் நிறுவனம் முறையாக திட்டமிடுவதில்லை. நாங்கள் தயாரிக்கும் பொருட்களை, வாடிக்கையாளர்களிடம் நேரடியாக விற்பதற்காக, அர்பன் ஹட் கடைகளை அமைத்தது. சுற்றுலா பயணியர் அறியும் விதமாக, நகர்ப் பகுதியில் கடை இருந்தால் தான் வியாபாரமே நடக்கும். ஊருக்கு வெளியே, ஒதுக்குப்புறமான இடத்தில் அமைத்து, நிதியை வீணடித்துள்ளனர். இதனால் எங்களுக்கு பயனில்லை.
- பெயர் வெளியிட விரும்பாத கைவினைக் கலைஞர்,
மாமல்லபுரம்.