/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பனையூரில் குடிநீர் தொட்டி அமைக்க வலியுறுத்தல்
/
பனையூரில் குடிநீர் தொட்டி அமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 27, 2025 11:25 PM
செய்யூர்: பனையூர் கிராமத்தில் புதிய மேல்நிலைகுடிநீர் தேக்கத்தொட்டி அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி, 5வது வார்டு பனையூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த வார்டில் முத்துமாரியம்மன் கோவில் தெரு மற்றும் பஜனை கோவில் தெருவில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலைத் தேக்கத்தொட்டிகள் உள்ளன.
ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலைத் தேக்கத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு குழாய் வாயிலாக மக்களுக்கு தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கோடை காலத்தில் போதிய தண்ணீர் இல்லாமல் கிழக்கு கடற்கரை சாலைப்பகுதி, அப்பா சாய் தெரு மற்றும் முத்துமாரியம்மன் கோவில் தெருக்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் கூடுதலாக மேல்நிலைத் தேக்கத்தொட்டி அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இரு ஆண்டுகளுக்கு முன் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பனையூரில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலைத் தேக்கத்தொட்டி அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தற்போது வரை மேல்நிலைத் தேக்கத்தொட்டி அமைக்கப்படாமல் உள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர்.
பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, பனையூர் பகுதியில் புதிய மேல்நிலைத் தேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

