/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வல்லிபுரம் - ஈசூர் பாலாற்றில் உயர்மட்ட பாலம்...பரிந்துரை!:ரூ.150 கோடி கேட்டு நெடுஞ்சாலை துறை கருத்துரு
/
வல்லிபுரம் - ஈசூர் பாலாற்றில் உயர்மட்ட பாலம்...பரிந்துரை!:ரூ.150 கோடி கேட்டு நெடுஞ்சாலை துறை கருத்துரு
வல்லிபுரம் - ஈசூர் பாலாற்றில் உயர்மட்ட பாலம்...பரிந்துரை!:ரூ.150 கோடி கேட்டு நெடுஞ்சாலை துறை கருத்துரு
வல்லிபுரம் - ஈசூர் பாலாற்றில் உயர்மட்ட பாலம்...பரிந்துரை!:ரூ.150 கோடி கேட்டு நெடுஞ்சாலை துறை கருத்துரு
ADDED : நவ 18, 2024 03:41 AM

செங்கல்பட்டு:வல்லிபுரம் - ஈசூர் பாலாற்றில் உயர்மட்ட பாலம் அமைக்க, 150 கோடி ரூபாய் நிதி கேட்டு, அரசுக்கு நெடுஞ்சாலைத் துறையினர் கருத்துரு அனுப்பி வைத்துள்ளனர். இதனால், 20 கிராமங்கள் மற்றும் சுற்றுலா பயணியர் பயன்பெறுவர்.
மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் சாலையில், வல்லிபுரம் - ஈசூர் இடையே பாலாற்று தரைப்பாலம், 1960ம் ஆண்டு கட்டப்பட்டது. சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை வழியாக, திருக்ககழுக்குன்றத்திற்கு அரசு டவுன் மற்றும் மாமல்லபுரம், கோவளம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன.
மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், பாலம் மூழ்கி, வெள்ளம் வடியும் வரை போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.
அப்போது, பூதுார், ஈசூர், வல்லிபுரம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறை மற்றும் அரசிடம் தொடர்ந்து கிராமவாசிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுமட்டும் இன்றி, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், மேலவலம்பேட்டை வழியாக, திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் வழியாக, கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வரலாம்.
இந்நிலையில், 2015ம் ஆண்டு பலத்த மழையின் போது, தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் சென்று, பாலம் வலுவிழந்தது. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அதன்பின், தரைப்பாலம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் கள ஆய்வு செய்ததில், தினமும் 5,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருவது தெரிந்தது. இதனால், 760 மீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்க, அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்பின், உயர்மட்ட பாலம் கட்ட, 150 கோடி ரூபாய் நிதி கேட்டு, அரசுக்கு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கருத்துரு அனுப்பி வைத்துள்ளனர். எனவே, வல்லிபுரம் - ஈசூர் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
வல்லிபுரம் - ஈசூர் பாலாற்றில் உள்ள தரைப்பாலத்தை அகற்றி, அதே இடத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க, 150 கோடி ரூபாய் நிதி கேட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளோம். நிதி கிடைத்தவுடன், கட்டுமானப் பணிகள் துவக்கப்படும்.
- நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்,
செங்கல்பட்டு.
வல்லிபுரம் - ஈசூர் பாலாற்று தரைப்பாலம், மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்குகிறது. அப்போது, போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்படும். அதனால், அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். புதிய உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும்.
- து.பிச்சாண்டி,
விவசாயி,
ஈசூர்.