/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேதகிரீஸ்வரர் கோவில் இட அத்துமீறல் தாசில்தார் பார்வையிட்டு விசாரணை
/
வேதகிரீஸ்வரர் கோவில் இட அத்துமீறல் தாசில்தார் பார்வையிட்டு விசாரணை
வேதகிரீஸ்வரர் கோவில் இட அத்துமீறல் தாசில்தார் பார்வையிட்டு விசாரணை
வேதகிரீஸ்வரர் கோவில் இட அத்துமீறல் தாசில்தார் பார்வையிட்டு விசாரணை
ADDED : அக் 24, 2024 12:44 AM
திருக்கழுக்குன்றம்:ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. கோவில் மலையடிவாரம் அருகில், இக்கோவிலுக்கு சொந்தமான கட்டளை சொத்தாக, கருணானந்த மடத்தின் இடம் உள்ளது.
இவ்விடத்தை, தனக்கு சொந்தமானதாக கூறி, கடந்த 2022ல், தனியார் அபகரிக்க முயன்றனர். கோவில் நிர்வாகத்தினர், ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தினர்.
இது தொடர்பாக, கோவில் நிர்வாகத்தினர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற அறிவுரையின்படி, இடம் தொடர்பாக வருவாய், பத்திரப்பதிவு துறை நடைமுறைகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கோவில் இடத்தில் தற்போது கம்பிவேலி அமைப்பு உள்ளிட்ட பணிகளை, தனியார் மேற்கொண்டு வந்தனர். அப்பணிகளை கோவில் நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தினர்.
இவ்விவகாரம் தொடர்பாக, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா, கோவில் செயல் அலுவலர் புவியரசு, தனியார், இந்து முன்னணி பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கோவில் இடத்திற்குரிய ஆவணங்களையும், தனியாரிடம் உள்ள ஆவணங்களையும் தாசில்தார் பார்வையிட்டார். கோவில் இடம் தொடர்பாக, வருவாய், பத்திரப்பதிவு ஆகிய துறைகளில் ஏற்கனவே முறையிட்டுள்ளதாக, செயல் அலுவலர் தெரிவித்தார்.
மேலும், சர்ச்சைக்குரிய இடத்தில், கோவில் நிர்வாகமோ, ஆக்கிரமிப்பாளரோ நுழையக்கூடாது என, வருவாய்த்துறை ஏற்கனவே அறிவித்துள்ளதால், நாங்கள் அத்துமீறவில்லை என விளக்கிய செயல் அலுவலர், தனியார் அத்துமீறி பணிகள் செய்வது ஏன் என, கேட்டார்.
இட உரிமை தொடர்பாக தீர்வு காணும் வரை, தனியார் அத்துமீறலை தடுத்து, தற்போதைய பணிகளையும் நிறுத்துமாறு, அவர் வலியுறுத்தினார்.
அதன்படி, தனியார் மேற்கொண்டுவரும் கட்டுமான பணிகளை நிறுத்த, தாசில்தார் அறிவுறுத்தினார். இதுதொடர்பாக, தாசில்தாரிடமும், திருக்கழுக்குன்றம் போலீசாரிடமும், செயல் அலுவலர் கடிதம் அளித்துள்ளார்.

