sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஜி.எஸ்.டி., சாலையில் அணிவகுத்த வாகனங்கள் 2 கி.மீ., : பள்ளங்கள், ஆக்கிரமிப்புகளால் தொடரும் அவதி

/

ஜி.எஸ்.டி., சாலையில் அணிவகுத்த வாகனங்கள் 2 கி.மீ., : பள்ளங்கள், ஆக்கிரமிப்புகளால் தொடரும் அவதி

ஜி.எஸ்.டி., சாலையில் அணிவகுத்த வாகனங்கள் 2 கி.மீ., : பள்ளங்கள், ஆக்கிரமிப்புகளால் தொடரும் அவதி

ஜி.எஸ்.டி., சாலையில் அணிவகுத்த வாகனங்கள் 2 கி.மீ., : பள்ளங்கள், ஆக்கிரமிப்புகளால் தொடரும் அவதி


ADDED : டிச 21, 2024 11:28 PM

Google News

ADDED : டிச 21, 2024 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை ஜி.எஸ்.டி., சாலை, சமீபத்திய மழையால் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. சாலையோர ஆக்கிரமிப்பு, வாகனங்கள் நிறுத்துவது உள்ளிட்ட அடாவடி செயல்களால், போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. நேற்று காலை, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, தென்மாவட்டங்கள் நோக்கி சென்ற வாகனங்கள் 2 கி.மீ., துாரத்திற்கு அணிவகுத்து ஊர்ந்து சென்றன.

தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையான சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

சென்னையில், பெருங்களத்துார் இரும்புலியூர் -- மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை நெல்வாய் சந்திப்பு வரை, 46.5 கி.மீ., துாரம் உடையது. இத்தடத்தில் தாம்பரம் முதல் பரனுார் சுங்கச்சாவடி வரை கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பாலத்தில், 1 கி.மீ., துாரத்திற்கு சாலை இருவழிப்பாதையாக உள்ளதால், 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், கடும் நெரிசல் ஏற்படுகிறது.

கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு தீர்வாக, அங்கு ரயில்வே பாலத்தையும், சாலையையும் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பீர்க்கன்காரணை உள்ளிட்ட பகுதியினர் பயன்படுத்தும் வகையில், வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இச்சுரங்கப்பாதை 'ப்ரீகாஸ்ட்' ரெடிமேட் சிமென்ட் பெட்டி முறையில் அமைக்கப்படுகிறது. இந்த முறையில், 195 அடி நீளத்திற்கு, ஐந்து ரெடிமேட் பெட்டிகள் பொருத்தப்பட உள்ளன.

இரு பெட்டிகள் பொருத்தப்பட்டு, மூன்றாவது பெட்டியை நகர்த்தும் பணி நடந்து வருகிறது. இப்பணியின் போது, தாம்பரம் - பெருங்களத்துார் மார்க்கமான ஜி.எஸ்.டி., சாலையில், நேற்று முன்தினம் திடீர் விரிசல் ஏற்பட்டது.

இதனால், தாம்பரத்தில் இருந்து செல்லும் வாகனங்களில், பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் பழைய சாலை வழியாகவும், மற்ற வாகனங்கள் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக போடப்பட்ட சாலை வழியாகவும், இரு பகுதிகளாக பிரித்து அனுப்பப்படுகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

தவிர, மாமண்டூர் -- இருங்குன்றம்பள்ளி இடையே பாலாறு உயர்மட்ட பாலத்தில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. பாலத்தின் மீது செல்லும்போது, வாகனங்களை குறைந்த வேகத்தில் இயங்கும் நிலை உள்ளது.

விடுமுறையை ஒட்டி நேற்று ஏராளமானோர் தங்களின் வாகனங்களில் தென்மாவட்டங்களுக்கு சென்றனர். இதனால் காலை, இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, 2 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டுகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

தகவல் அறிந்து பாலாற்று பாலத்தில் ஏற்பட்ட பள்ளங்களை மட்டும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் தற்காலிகமாக சீரமைத்தனர்.

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், அதையொட்டியுள்ள அணுகு சாலையான ஜி.எஸ்.டி., சாலையிலும், வாகனங்கள் செல்வதில் கடுமையான சிரமம் உள்ளது.

தாம்பரம் மற்றும் குரோம்பேட்டையில், ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும் வாகன நிறுத்தமாக மாறிவிட்டது.

சானடோரியம் சித்த மருத்துவமனை நுழைவாயிலில் இருந்து, குரோம்பேட்டை வரை, ஜி.எஸ்.டி., சாலையில் தனியார் பேருந்து, வேன், கார், லோடு ஆட்டோ என, வரிசையாக வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்துள்ளனர்.

சாலையின் கிழக்கு பகுதியில், கடைகளுக்கு வரும் வாகனங்களை, ஜி.எஸ்.டி., சாலையிலேயே வரிசையாக நிறுத்தி, பார்க்கிங் பகுதியாக பயன்படுத்துகின்றனர்.

புறநகர் பகுதிகளான வண்டலுார், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், பரனுார், மாமண்டூர், படாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இருபுறமும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அத்துடன் சமீபத்திய மழையால், ஜி.எஸ்.டி., சாலையின் பல இடங்கள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களுக்கு முக்கிய காரணம், பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாகவும், மின் விளக்குகள் எரியாமலும் இருப்பது தான்.

வண்டலுார் இரணியம்மன் கோவிலில் இருந்து மகேந்திரா சிட்டி வரை புதிதாக அமைக்கப்பட்ட அணுகுசாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.

முகூர்த்த நாட்களில், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

சாலையை ஒட்டி உள்ள கடைகளின் உரிமையாளர்கள், பெரும்பாலும் தங்களது கடைகளின் பெயர் பலகையை சாலையில் வைத்து விளம்பரப்படுத்துகின்றனர். சாலையோர கடைகளில் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களால், போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.

தேசிய நெடுஞ்சாலை நெடுகிலும், தனியார் தொழிற்சாலை பேருந்துகளும், கனரக வாகனங்களும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.

இதன் காரணமாக, விபத்துக்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில் உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில், விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

அவ்வப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதும், மீண்டும் புதிது புதிதாய் முளைப்பதும் தொடர்கதையாக உள்ளது.

எனவே, வாகன நெரிசல் மற்றும் விபத்துக்களை குறைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

* பழுது நீக்கம்

பெருங்களத்துார் - கூடுவாஞ்சேரி வரை சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணி நடக்கிறது. பரனுார் சுங்கச்சாவடி - ஆத்துார் சுங்கச்சாவடி வரை புது சாலை அமைக்கப்படுகிறது. மின் விளக்குகளை பழுது நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்துக்களை குறைக்க சிக்னல், நடைபாதை மேம்பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

- தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி



அரசியல் தலையீடு

ஜி.எஸ்.டி., சாலை நடைபாதையில் துவங்கிய ஆக்கிரமிப்பு கடைகள், தற்போது சாலை வரை நீண்டு உள்ளன. இதனால் பாதசாரிகள், பயணியர் அவதியடைகின்றனர். உள்ளூர் அரசியல் தலையீடு காரணமாக, கடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் தொடர்கிறது. விபத்தில் சிக்கும் வாகனங்களை அகற்ற, சுங்கச்சாவடி நிர்வாகம் வாகனம் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் ஏற்பாடு செய்யாததால், வாகன உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர்.

- போலீசார்



பயமாக உள்ளது

விபத்துகளால் மருத்துவ செலவு, வாகன பழுது நீக்கம் என, நடுத்தர குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். விபத்துகளை காணும்போது, வாகனங்களை இயக்கவே பயப்படும் சூழல் உருவாகி உள்ளது. முக்கிய பகுதிகளில் பாதசாரிகள் கடக்க, நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

- த.இளங்கோவன்,

சிங்கபெருமாள் கோவில்.

6 ஆண்டுகளில் 1,023 விபத்துகள் 223 பேர் பலி


சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பெருங்களத்துார் இரும்புலியூர் -- மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை நெல்வாய் சந்திப்பு வரை, ஆறு ஆண்டுகளில் 1,023 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 223 பேர் இறந்துள்ளனர்.
ஆண்டு விபத்துக்கள் இறந்தோர்-படுகாயமடைந்தோர்
2018 - -19 235 51 161
2019-20 384 77 146
2020-21 143 36 45
2021-22 78 13 25
2022-23 86 25 72
2023-24 97 21 32
மொத்தம் 1,023 223 481
* இதில் அதிகபட்சமாக, 2019 - 20ம் ஆண்டில் 384 விபத்துகளில், 77 பேர் இறந்துள்ளனர்; 146 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.



ஓ.எம்.ஆரில் அறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றியதால் அவதி

சென்னை:ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதியாக, ஓ.எம்.ஆர்., உள்ளது. ஆறுவழிச் சாலையான இங்கு, மெட்ரோ ரயில் பணி நடப்பதால், நான்கு வழியாக மாற்றப்பட்டு உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

நான்கு வழியாக இருந்த இ.சி.ஆரில், திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., துாரம், ஆறுவழியாக மாற்றப்படுகிறது. ஆனால், இரவு நேரத்தில், இ.சி.ஆரில் கோவளத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி செல்லும் வாகனங்களை, அக்கரையில் இருந்து சோழிங்கநல்லுார் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

நன்கு பழக்கப்பட்ட வாகன ஓட்டிகள், 300 மீட்டர் துாரத்தில் உள்ள யு - டர்னில் திரும்பி, மீண்டும் திருவான்மியூர் நோக்கி செல்கின்றனர்.

ஊருக்கு புதியவர்கள், மத்திய சென்னை, வடசென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியைச் சேர்ந்தோர், சோழிங்கநல்லுார் நோக்கி செல்கின்றனர்.

அங்கிருந்து நாவலுார் நோக்கி, 150 மீட்டர் சென்று யு - டர்ன் செய்து, மீண்டும் துரைப்பாக்கம் நோக்கி சென்று, அங்கும் யு - டர்ன் செய்து, திருவான்மியூர், அடையாறு நோக்கி செல்கின்றனர்.

இதற்கு, 15 கி.மீ., சுற்ற வேண்டி உள்ளது. மெட்ரோ பணி மற்றும் சிக்னலில் காத்திருக்கும் நேரத்தை குறைக்க, பல இடங்களில் யு - டர்ன் அமைக்கப்பட்டது.

ஆனால், அதில் திரும்பி எங்கெல்லாம் போக முடியும் என, அறிவிப்பு பலகை வைக்கவில்லை. மேலும், வார இறுதி நாட்களில், திடீர் யு - டர்ன் செய்து வாகனங்களை திருப்பி விடுகின்றனர்.

இதனால், வாகன ஓட்டிகள் குழப்பம் அடைவதுடன், திசை மாறி சென்று, 'ஒன்வே' என, போலீசாரிடம் சிக்கி அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us