/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மழை, வெயிலில் நாசம்
/
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மழை, வெயிலில் நாசம்
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மழை, வெயிலில் நாசம்
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மழை, வெயிலில் நாசம்
ADDED : நவ 21, 2025 03:06 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு பழைய தாலுகா அலுவலக வளாகத்தில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மழை, வெயிலில் வீணாகி வருகின்றன.
செங்கல்பட்டு பழைய தாலுகா அலுவலக வளாகத்தில், கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம் செயல்பட்டு வந்தது.
இந்த கட்டடம் சிதிலமடைந்ததால், பொன்விளைந்த களத்துார் செல்லும் சாலையில், புதிதாக காவல் நிலைய கட்டடம் கட்டப்பட்டது.
இதையடுத்து, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம் கடந்த ஆண்டு பிப்., மாதம், புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், செங்கல்பட்டு பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் காவல் நிலையம் செயல்பட்ட போது, பல்வேறு வழக்குகளில் சிக்கிய பைக், ஆட்டோ, லாரி, பொக்லைன் என, 500க்கும் மேற்பட்ட வாகனங்கள், காவல் நிலைய வளாகம் மற்றும் எதிரே உள்ள காலி இடம், ரயில்வே துறைக்குச் சொந்தமான இடங்களில் நிறுத்தி, பல ஆண்டுகளாக குப்பை போல உள்ளன.
தற்போது, இந்த வாகனங்கள் மீது செடி, கொடிகள் படர்ந்து உள்ளன. வழக்குகள் முடிந்து வாகனங்களை உரிமையாளர்கள் எடுத்துச் சென்றாலும், அவை பழைய இரும்பு கடைகளில் எடைக்கு போடும் நிலையில் தான் உள்ளன.
மேலும், காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், இங்குள்ள வாகனங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை.
குறிப்பாக, பெரும்பாலான வாகனங்களில் இருந்த 'பேட்டரி'கள் மர்ம நபர்களால் திருடப்பட்டு உள்ளன.
எனவே, இங்கு நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்களை முறையாக கணக்கெடுத்து, யாரும் உரிமை கோராத வாகனங்களை முறையாக பொது ஏலம் விட வேண்டும்.
மற்ற வாகனங்களை, பாதுகாப்பான இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

