/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை புறநகர் பஸ் நிலையத்திற்காக துார்க்கப்பட்ட வேண்பாக்கம் குளம்
/
செங்கை புறநகர் பஸ் நிலையத்திற்காக துார்க்கப்பட்ட வேண்பாக்கம் குளம்
செங்கை புறநகர் பஸ் நிலையத்திற்காக துார்க்கப்பட்ட வேண்பாக்கம் குளம்
செங்கை புறநகர் பஸ் நிலையத்திற்காக துார்க்கப்பட்ட வேண்பாக்கம் குளம்
ADDED : ஜன 30, 2024 05:51 AM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம் அருகில், ரயில் நிலையம், மேற்பார்வை மின்வாரிய அலுவலகம், அரசு போக்குவரத்து கழக பணிமனை ஆகியவை அமைந்துள்ளன.
பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, ராட்டினங்கிணறு வரை, திருமணம் மற்றும் விழாக்காலங்களில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க, புதிய பேருந்து நிலையம், அரசு போக்குவரத்து கழக பணிமனை ஆகியவற்றை, நகருக்கு வெளியே அமைக்க வேண்டும் என, அரசிடம், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, ஆலப்பாக்கம் ஊராட்சியில், மலையடிவேண்பாக்கம் கிராமத்தில், அரசு மருத்துவக்கல்லுாரிக்கு சொந்தமான 9.95 ஏக்கர் நிலம், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம், அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்பின், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க, 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'டெண்டர்' விடப்பட்டது.
தொடர்ந்து, மலையடிவேண்பாக்கம் கிராமத்தில், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய பணிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடந்த நவ., 15ம் தேதி, காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி, பணியை துவக்கி வைத்தார்.
கடந்த 5ம் தேதி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.
அதன்பின், ஒப்பந்ததாரர்கள் பணிகளை துவக்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பேருந்து நிலையம் அமைய உள்ள மையப்பகுதியில், மலையடி வேண்பாக்கம் சர்வே எண் 70ல், மூன்று ஏக்கருக்கு மேல் குளம் உள்ளது.
இந்த குளத்து தண்ணீரை, கால்நடைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருந்தது.
தற்போது, புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவக்கியவர்கள், குளத்தை மண் போட்டு மூடி விட்டனர். இதனால், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என, உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளன. இந்த உத்தரவை மீறி குளம் துார்க்கப்பட்டுள்ளது.
இதனால், பழைய நிலைக்கே குளத்தை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருதுகின்றனர்.
புறநகர் பேருந்து நிலைய பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள குளத்தை மீட்கச் வேண்டும் என, மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், கலெக்டரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.
இம்மனு மீது விசாரணை செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்தார். எனவே, மூடப்பட்ட குளத்தை சீரமைத்து தர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.