/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கயநல்லுாரில் கிராம மக்கள் குடியேறும் போராட்டம்: போலீசார் தடுத்து நிறுத்தம்
/
கயநல்லுாரில் கிராம மக்கள் குடியேறும் போராட்டம்: போலீசார் தடுத்து நிறுத்தம்
கயநல்லுாரில் கிராம மக்கள் குடியேறும் போராட்டம்: போலீசார் தடுத்து நிறுத்தம்
கயநல்லுாரில் கிராம மக்கள் குடியேறும் போராட்டம்: போலீசார் தடுத்து நிறுத்தம்
ADDED : நவ 08, 2025 01:39 AM

சித்தாமூர்: கயநல்லுாரில் நேற்று, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி, குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மக்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சித்தாமூர் அடுத்த அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட கயநல்லுார் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் வசித்து வரும் நிலையில், பட்டா கோரி தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.
நடவடிக்கை எடுக்காததால், தற்போது தரிசு நிலம் என இணைய வருவாய் கணக்கில் உள்ள சர்வே எண் '66/2எ' இடத்தில், கிராம மக்கள் 150க்கும் மேற்பட்டோர், குடியேறும் போராட்டத்தில் ஈடுபட, நேற்று காலை 11:30 மணிக்கு பேரணியாக வந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் டி.எஸ்.பி., சதீஸ்குமார் தலைமையிலான போலீசார், மக்களை தடுத்து நிறுத்தினர்.பின் அவர்களிடம், செய்யூர் வட்டாட்சியர் கணேசன் பேச்சு நடத்தி, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாய்மொழியாக தெரிவித்தார்.
எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, சர்வே எண் 66/2எ நிலம் குறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தகுதியுள்ள நபர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதம் வழங்கினார். இதையடுத்து, மாலை 3:30 மணிக்கு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

