/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரிக்கரையில் சாலை பணி நிறுத்தம் கிராம மக்கள் திடீர் மறியல்
/
ஏரிக்கரையில் சாலை பணி நிறுத்தம் கிராம மக்கள் திடீர் மறியல்
ஏரிக்கரையில் சாலை பணி நிறுத்தம் கிராம மக்கள் திடீர் மறியல்
ஏரிக்கரையில் சாலை பணி நிறுத்தம் கிராம மக்கள் திடீர் மறியல்
ADDED : செப் 09, 2025 12:47 AM

மதுராந்தகம், பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய ஏரிக்கரையின் மீது தார் சாலை போடும் பணி நிறுத்தப்பட்டதால், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டு பாக்கம் ஊராட்சி உள்ளது.
இங்கு, மதுராந்தகம் பாசன பிரிவுக்கு சொந்தமான, 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியின் பாசன நீரை பயன்படுத்தி, ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த ஏரிக்கரை சாலையை, வயலுார், தாதங்குப்பம், புளிக்கொரடு, வசந்தவாடி, முதுகரை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதி மக்கள், விவசாய பயன்பாட்டிற்கான டிராக்டர் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்டவைகளை ஏரிக்கரை வழியாக கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக, ஏரிக்கரை மீது தார் சாலை அமைக்க கோரி, கலெக்டர் மற்றும் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கிராம மக்கள் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, பெரிய ஏரிக்கரையின் மீது, 1,500 மீட்டர் நீளத்திற்கு, கனிமவள நிதியில் 49 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்க எம். சாண்ட் கலந்த ஜல்லி கலவை கொட்டப்பட்டு, முதற்கட்ட பணி துவங்கப்பட்டது.
இந்நிலையில் தனிநபர் தலையீட்டால் பாக்கம் ஏரி கரையின் மீது அமைக்கப்படும் சாலை பணி, கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், சாலையை பயன்படுத்தும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.
நேற்று நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பாக்கம் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேல்மருவத்துார் மற்றும் மதுராந்தகம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினர். அதிகாரிகள் சமாதானத்தையடுத்து கலைந்து போக செய்தனர்.