/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போலீஸ் குடியிருப்பில் வெடித்தது வெடிகுண்டா? மாமல்லையில் தடயவியல் குழுவினர் சோதனை!
/
போலீஸ் குடியிருப்பில் வெடித்தது வெடிகுண்டா? மாமல்லையில் தடயவியல் குழுவினர் சோதனை!
போலீஸ் குடியிருப்பில் வெடித்தது வெடிகுண்டா? மாமல்லையில் தடயவியல் குழுவினர் சோதனை!
போலீஸ் குடியிருப்பில் வெடித்தது வெடிகுண்டா? மாமல்லையில் தடயவியல் குழுவினர் சோதனை!
ADDED : அக் 19, 2024 01:36 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில், கைவிடப்பட்ட பாழடைந்த குடியிருப்பு கட்டடத்தில், நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு, மர்ம பொருள் பலத்த ஓசையுடன் வெடித்து சிதறியது.
கட்டட சுவர் சிதறி, புதிய குடியிருப்பு வீடுகளின் ஜன்னல்கள் உடைந்தன. மணிகண்டன் என்ற போலீஸ்காரருக்கு, கை, கால்களில் காயம் ஏற்பட்டது.
பாழடைந்த குடியிருப்பு பகுதியில் குவிக்கப்பட்டிருந்த பறிமுதல் வாகனத்திலிருந்த, சி.என்.ஜி., காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, போலீசார் கருதினர்.
தொடர்ந்து, வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், தடய அறிவியல் துறையினர் ஆகியோர், நேற்று சோதனை நடத்தினர்.
காலை 11:00 மணிக்கு வந்த தடய அறிவியல் துறையினர், அங்கு சிதறி கிடந்த அரைக்கோள வடிவ பொருள், கருகிய காகித துண்டுகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.
மாலை 3:30 மணிக்கு, வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் வந்தபின், பொக்லைன் வாயிலாக, கட்டட இடிபாடுகள் முழுதாக அகற்றப்பட்டன. தவிர, வேறு வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதையும், அவர்கள் அறிந்தனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களை, தடய அறிவியல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், கைப்பற்றப்பட்ட இரு அரைகோள வடிவ பொருட்களை இணைத்தால் பந்துபோல் ஒருபொருளாக இருப்பதையும், அதன் மீது காகிதம் சுற்றியிருந்ததும் தெரியவந்துள்ளது என்றனர்.
இது வெடிகுண்டு தானா என்பதை, ஆய்வுக்கு பின்னரே தெரிவிக்க முடியும் எனவும், அவர்கள் தெரிவித்தனர்.

