/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தர்பூசணி பழங்களை நம்பி உண்ணலாம் தோட்டக்கலை துறையினர் தகவல்
/
தர்பூசணி பழங்களை நம்பி உண்ணலாம் தோட்டக்கலை துறையினர் தகவல்
தர்பூசணி பழங்களை நம்பி உண்ணலாம் தோட்டக்கலை துறையினர் தகவல்
தர்பூசணி பழங்களை நம்பி உண்ணலாம் தோட்டக்கலை துறையினர் தகவல்
ADDED : ஏப் 23, 2025 07:55 PM
செங்கல்பட்டு:கோடை காலங்களில், தர்பூசணி பழங்களை பொதுமக்கள் உண்ணலாம் என, தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், 14,000 ஏக்கருக்கு மேல் தர்பூசணி சிறந்த முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இப்பணியில், 5,000க்கும் அதிகமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் முக்கியமான வாழ்வாதாரமாக, தர்பூசணி சாகுபடி உள்ளது.
விவசாயிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விதை நடுவர். கோடை காலமான ஏப்ரல், மே ஆகிய மாதங்களில், தர்பூசணி சந்தைக்கு விற்பனைக்கு வரும்.
இங்கு, சாகுபடி செய்யப்படும் பழங்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
கோடை காலங்களில் தர்பூசணி சாப்பிடுவது நமக்கு நீரிழப்பு வராமல் தடுப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
வைட்டமின் 'பி6, சி, மெக்னீசியம்' மற்றும் போட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
தர்பூசணியில், 92 சதவீதம் நீர் உள்ளது. தற்போது தர்பூசணி, விவசாயிகளின் வயல்களில் 1 கிலோ 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
சந்தையில் இந்த தர்பூசணி இரண்டு வண்ணங்களில் விற்கப்படுகிறது. வெளியில் இளம் பச்சை நிற தோலில் வரிக்கோடுகள் மற்றும் உள்ளே இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள ரகங்களான டிராகன் கிங் என்.எஸ் 295 மகேந்திரா போன்ற ரகங்கள்.
வெளித்தோல் கரும் பச்சை நிறத்தில் வரிக்கோடுகள் இல்லாமல், உள்ளே மஞ்சள் நிறத்தில் இருப்பது ஆரோகி ரகம். வெளியே மஞ்சள் உள்ளே இளஞ்சிவப்பு இருப்பது, விஸாலா ரகம்.
அந்த வகையில் மாவட்டத்தில், 15க்கும் மேற்பட்ட தர்பூசணி ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இதில் மிகவும் பிரபலமாக, விவசாயிகளால் அதிகம் சாகுபடி செய்யப்படுவது டிராகன் கிங், என்.எஸ். 295, ஐஸ் பாக்ஸ், விஸாலா, மகேந்திரா 6060, ஸ்வீட்டி, கருடா, ஆரோகி, சாம்ராட், விக்ரம், மிருதுல்லா, வில்லியம்ஸ், ஆலிசன் போன்றவை.
அனைத்து வகை தர்பூசணிகளிலும் அதிக அளவிலான வைட்டமின், ஊட்டச்சத்துக்கள், நுண்ணுாட்டச் சத்துக்கள் சிட்ருலின் எனும் அமினோ அமிலம் முதலிய சத்துக்களும் உள்ளன.
கடந்த சில நாட்களாக தொலைக்கட்சி மற்றும் ஊடகங்கள் வாயிலாக, தர்பூசணியில் அடர் சிவப்பு நிறத்திற்காக எரித்திரோசின் ஊசி செலுத்தப்படுவதாக செய்திகள் பரப்பப்படுகின்றன.
இதையடுத்து, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் தோட்டக்கலை இயக்குநரின் உத்தரவுப்படி, தோட்டக்கலை துறை சார்பாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன், விவசாயிகளின் வயல்களில் சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில், எந்தவித ரசாயன சாயங்களும் தர்பூசணி பழங்களில் செலுத்தப்படவில்லை.
மேலும், தர்பூசணி உற்பத்தி அதிக அளவில் உள்ள காரணத்தாலும், சந்தை தேவை மற்றும் சந்தை வரத்து அதிகமாக உள்ளதாலும், ரசாயன நிறமிகளை சேர்ப்பதற்கான தேவை ஏற்பட வேண்டிய அவசியமே இல்லை.
அவ்வாறு ஊசி செலுத்தப்பட்டால், தர்பூசணி பழம் எளிதில் அழுகி விடும். மேலும், தர்பூசணியின் வெள்ளை நிற தோல் பகுதியிலும் சாயம் செலுத்தப்பட்டதற்கான சிவப்பு நிறம் காணப்படும்.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு பழத்திற்கும் ரசாயன சாயம் செலுத்துவது என்பது இயலாத காரியம்.
விவசாயிகள் யாரும் இத்தகை செயல்களை புரிவதில்லை. எனவே, பொதுமக்கள் அனைவரும் தர்பூசணி பழங்களை கோடை காலத்தில் நம்பி உண்ணலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.